ADDED : ஜூன் 13, 2025 01:02 AM
கோவை:தமிழகத்தில், 1,000 மகளிருக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, விரைவில் 'இ-ஆட்டோ' வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், விவசாயக் கடன், சிறு வணிகக் கடன், கல்வி கடன், நகை கடன் என பல பிரிவுகளில் கடன் வழங்கப்படுகின்றன.
மகளிர், தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும், சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தாராளமாக கடன் வழங்கப்படுகின்றன. இதன் அடுத்த கட்டமாக, தமிழகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆயிரம் மகளிருக்கு, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவான 'இ-ஆட்டோ' வாங்க, கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, தலா, மூன்று லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளது.
இதில் பயன்பெற, 25 வயதில் இருந்து 45 வயதுக்குள் இருக்க வேண்டும். சிபில் 'ஸ்கோர்' 720க்கு மேல் இருக்க வேண்டும். கடன் பெற்ற மூன்று ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் நடைமுறை முடிந்த பின் விரைவில் வழங்கப்படும் எனவும், விபரங்களுக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளை அணுகலாம் என, மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.