எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளில் ஊழல் விசாரணைக்கு முன்னுரிமை: ஐகோர்ட் உத்தரவு
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளில் ஊழல் விசாரணைக்கு முன்னுரிமை: ஐகோர்ட் உத்தரவு
ADDED : நவ 14, 2024 10:25 PM
சென்னை:தமிழகத்தைச் சேர்ந்த, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளில், கொலை, போக்சோ, கொலை முயற்சிக்கு அடுத்ததாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து விசாரிக்கும்படி, சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுதும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் பல, சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
சிறப்பு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் விசாரணைக்கு, உயர் நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெற்று, இழுத்தடிக்கும் நிலையும் உள்ளது.
எனவே, இந்த வழக்கு களின் விசாரணையை விரைந்து முடிக்க ஏதுவாக, அவற்றை கண்காணிக்கும்படி, உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி அடங்கிய முதல் பெஞ்ச் முன், கடந்த ஏப்ரலில் விசாரணைக்கு வந்தது. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்கு விபரங்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டன.
561 வழக்குகள்
அறிக்கையில், 'மாநிலம் முழுதும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ், 561 வழக்குகளும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், 20 வழக்குகளும் உள்ளன. ஒன்பது வழக்குகளில் சாட்சிகள் விசாரணை முடியும் நிலை உள்ளது' என்று கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்டிருந்த மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், ''எம்.பி., - எம்.எல்.ஏ., வுக்கு எதிரான வழக்குகளில், ஊழல் வழக்குக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவி கால விபரங்களை தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
பதவிக்காலம்
இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த தகவல்களை, தலைமை பதிவாளர் அளிக்க வேண்டும்.
எம்.பி., - எம்.எல். ஏ.,வுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்ததாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து, சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும்.
சிறப்பு நீதிமன்றங்களில் தற்போது உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், தேவைப்படும் வசதிகள் குறித்து, சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் முதன்மை நீதிபதிகள், தலைமை பதிவாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுஆய்வு செய்து பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ள வழக்குகளின் விபரங்களையும், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அளிக்க வேண்டும்.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையை, ஜனவரி 9க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.