அதிகாரிகள் வீடுகளில் வேலை செய்யும் கைதிகள்? அடிக்கடி ஆய்வு செய்ய டி.ஜி.பி.,க்கு உத்தரவு
அதிகாரிகள் வீடுகளில் வேலை செய்யும் கைதிகள்? அடிக்கடி ஆய்வு செய்ய டி.ஜி.பி.,க்கு உத்தரவு
ADDED : அக் 29, 2024 11:41 PM
சென்னை:கைதிகளையும், சீருடை பணியாளர்களையும், அதிகாரிகளின் வீடுகளில் வேலையில் ஈடுபடுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய, அனைத்து நடவடிக்கைகளையும் டி.ஜி.பி., எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கலாவதி என்பவர் தாக்கல் செய்த மனு:
என் மகன் சிவகுமாருக்கு, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலுார் சிறையில் உள்ளார்; வேலுார் டி.ஐ.ஜி., வீட்டில் இருந்து 4.50 லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியதாக குற்றம்சாட்டி, என் மகனை தாக்கி, தனிமை சிறையில் அடைத்துஉள்ளனர்.
அதிர்ச்சி
என் மகன் உயிருக்கு ஆபத்து உள்ளது. வேலுார் சிறையில் இருந்து, சேலம் சிறைக்கு மாற்ற வேண்டும். உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந் தது. உயர் நீதிமன்ற உத்தர வின்படி, மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி, அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மாஜிஸ்திரேட் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சிறை அதிகாரிகளின் வீடுகளில், தண்டனை கைதிகளை சட்டவிரோதமாக பயன்படுத்துவது பற்றியும், அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.
தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறு செய்தவர்களுக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்து, உடனடியாக விசாரணையை துவங்க, சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி.,க்கு உத்தரவிடப்படுகிறது. வேலுார் சிறையில் இருக்கும் சிவகுமாரை, சேலம் மத்திய சிறைக்கு மாற்றி, உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த உத்தரவை தொடர்ந்து, சிறை அதிகாரிகள் சிலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சிறை அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. சிறையில் இருக்கும் கைதிகளுக்கு ஏதும் நேர்ந்தால், அதற்கு சிறை அதிகாரிகள் தான் முழு பொறுப்பு.
கைதிகளை, சிறை அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்ற பயன்படுத்துவதும், அதை கண்காணிப்பதும் குற்றம்; சட்டவிரோதம். அந்த அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மனிதாபிமானமற்ற முறையில் கைதிகளை நடத்தக்கூடாது; சித்ரவதை செய்யக்கூடாது; அவர்கள் ஒன்றும் அடிமை கள் அல்ல. சட்டப்படி தான் கைதிகளை தண்டிக்க வேண்டும்.
அவர்களை சித்ரவதை செய்வதால், குற்றங்கள் குறைந்து விடாது; கூடுதலாக குற்றங்கள் செய்யவே துாண்டும். சிறை அதிகாரிகள், தங்கள் அதிகாரங்களை கவனமுடன், எச்சரிக்கையுடன் செயல்படுத்த வேண்டும்.
கைதிகளையும், சீருடை பணியாளர்களையும், சிறை அதிகாரிகளின் வீடுகளில் வேலையில் ஈடுபடுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய, டி.ஜி.பி., அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
திடீர் ஆய்வு
இந்த வழக்கில், குற்ற வழக்கு பதிவு செய்து, துறை நடவடிக்கையும் துவங்கப்பட்டுள்ளது. தொடர் நடவடிக்கையை, சட்டப்படி எடுக்க வேண்டும்.
பதிவு செய்த குற்ற வழக்கில், புலன் விசாரணையை தொடர வேண்டும். வழக்கு விசாரணையை, கீழமை நீதிமன்றம் விரைவுபடுத்த வேண்டும். துறை ஒழுங்கு நடவடிக்கையை, அரசு எடுக்க வேண்டும்.
சிறைவாசிகளை, அதிகாரிகளின் வீடுகளில் பணியில் ஈடுபடுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய, அடிக்கடி திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள, டி.ஜி.பி., மற்றும் உள்துறை செயலருக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.