மேட்டூர் உள்ளிட்ட நான்கு அணைகளை துார் வார ஆலோசனை வழங்க தனியார் நிறுவனங்கள் தேர்வு
மேட்டூர் உள்ளிட்ட நான்கு அணைகளை துார் வார ஆலோசனை வழங்க தனியார் நிறுவனங்கள் தேர்வு
ADDED : நவ 11, 2024 06:23 AM

சென்னை ; மேட்டூர் உள்ளிட்ட நான்கு அணைகளை துார்வாருவது தொடர்பாக ஆலோசனை வழங்க, தனியார் நிறுவனங்களை நீர்வளத்துறை தேர்வு செய்ய உள்ளது.
'சேலம் - மேட்டூர், தேனி - வைகை, திருப்பூர் - அமராவதி, கன்னியாகுமரி - பேச்சிப்பாறை அணைகளின் கொள்ளளவை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்' என, 2020 - 21ல், சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், துார்வாரும் பணிகளுக்கு சட்ட ரீதியான அனுமதி மற்றும் ஆலோசனைகளை பெற, தனியார் நிறுவனங்களை நியமிக்க நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது. இப்பணிக்கு, 3.63 கோடி ரூபாயையும் அரசு ஒதுக்கியுள்ளது.
பரிசீலனை
ஆலோசனை நிறுவனங்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டு உள்ளது. வைகை அணைக்கு, வரும் 13ம் தேதியும், அமராவதி அணைக்கு, 20ம் தேதியும் நிறுவனங்கள் தேர்வு நடக்க உள்ளது.
மேட்டூர் மற்றும் பேச்சிப்பாறை அணைகளுக்கு நிறுவனங்கள் தேர்வு முடிக்கப்பட்டு, முடிவு அரசின் பரிசீலனையில் உள்ளது.
நான்கு அணைகளுக்கான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டதும், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நான்கு அணைகளிலும் துார்வாரும் பணிகள் துவங்க உள்ளன.
இந்நிலையில், 'மேட்டூர் அணை உட்பட நாட்டில் உள்ள எந்த அணையையும் துார்வார முடியாது. அணைகளில் உள்ள மணல் போக்கிகள் வாயிலாக, அடியில் தேங்கும் மணல் அடித்து செல்லப்பட்டு, ஆற்றில் தேங்கும். ஆற்றில் தான் துார்வார முடியும்' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.
அரசு நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், அணைகளை துார்வார முடியாது என்று அமைச்சர் கூறியது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
வண்டல் மண் எடுத்தனர்
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, நீர்வளத்துறை செயலர் மணிவாசன் தரப்பில், நேற்று அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
அதே நேரம், மேட்டூர் அணையை துார்வாரும் பணியை, 2017 மே 29ம் தேதி, அப்போதைய முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
அணையின் வலது கரை பகுதியில் உள்ள மூலக்காடு, கொளத்துார், பண்ணாவாடி; இடதுகரையில் உள்ள கூணான்டியூர், கோனுார் ஆகிய இடங்களில், வண்டல் மண் எடுக்கும் பணிகள் நடைபெற்றன.
விவசாய தேவைக்கு நன்செய் நிலத்துக்கு, 1 ஏக்கருக்கு, 25 டிராக்டர்கள், புன்செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு, 30 டிராக்டரில், மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மீண்டும் துார்வாரும் பணிக்கு ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய, நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதனால், நீர்வளத்துறையில் என்ன நடக்கிறது என்பதே புரியாத புதிராக உள்ளது.