குறைந்த விலையிலே மின்சாரம் கொள்முதல்: அமைச்சர் தகவல்
குறைந்த விலையிலே மின்சாரம் கொள்முதல்: அமைச்சர் தகவல்
ADDED : ஏப் 22, 2025 11:47 PM
சென்னை:''தனியாரிடம் இருந்து, குறைந்த விலையிலேயே மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது,'' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - செந்தில்குமார்: அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை, விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. கடந்த நான்காண்டுகளில் புதிய மின் திட்டங்களும் வரவில்லை. இதனால், வெளியில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதால், மின்வாரியத்திற்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி: கருணாநிதி கடந்த 2010ல் முதல்வராக இருந்தபோது துவக்கப்பட்ட வடசென்னை அனல்மின் நிலைய திட்டம், இப்போதுதான் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. உடன்குடி மின் நிலையத்தின் முதல் அலகு, அடுத்த மூன்று மாதத்தில், செயல்பாட்டுக்கு வரும்.
குந்தா புனல் மின் நிலையம் இந்த ஆண்டு இறுதியிலும், கொல்லிமலை மின்நிலையம் அடுத்த ஆண்டு பிப்ரவரியிலும் செயல்பாட்டுக்கு வரும். தமிழகத்தின் மொத்த மின் தேவையில் 50 சதவீதம், அரசின் சொந்த உற்பத்தியாக இருக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
செந்தில்குமார்: 'ஸ்மார்ட்' மின் மீட்டர் பராமரிப்பை, தனியாரிடம் விடப்போவதாக செய்திகள் வருகின்றன. இதன் வாயிலாக மின்வாரியத்தை படிப்படியாக தனியாரிடம் விட அரசு முயற்சிக்கிறதா?
அமைச்சர் செந்தில் பாலாஜி: மின்வாரியத்தில் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடர்ந்து அரசுத் துறையாகவே மின்வாரியம் இயங்கும்.
செந்தில்குமார்: கோடை காலங்களில் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. இதை உணர்ந்து முன்கூட்டியே கொள்முதல் செய்யாமல், கோடை காலத்தில் அதிக விலைக்கு வாங்குவதால், மின்வாரியத்திற்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி: தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் 6,000 மெகாவாட், கூடுதல் மின்தேவை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, கடந்த டிசம்பர், ஜனவரியில் டெண்டர் விட்டு, இரண்டு மாதங்களுக்கு தேவையான மின்சாரத்தை குறைந்த விலையில் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
செந்தில்குமார்: தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, மின் வெட்டும் வந்து விடுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி: இந்தியாவில், 99.97 சதவீதம் முழுமையாக மின்சாரம் வழங்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு முழுமையான மின்சார வினியோகம் இல்லை. எங்காவது மின் தடை இருப்பதாக சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

