முன்னோட்ட சோதனையின்றி மென்பொருள் கொள்முதல்: செய்முறை தேர்வுகள் நடத்துவதில் நெருக்கடி
முன்னோட்ட சோதனையின்றி மென்பொருள் கொள்முதல்: செய்முறை தேர்வுகள் நடத்துவதில் நெருக்கடி
UPDATED : நவ 14, 2026 09:36 PM
ADDED : நவ 14, 2026 09:34 PM
கோவை: அரசு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ், புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட தேர்வுகளுக்கான மென்பொருள் குளறுபடியால், செய்முறை தேர்வுகள் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 600 பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. கடந்த அக்டோபர் இறுதி முதல் நவ., 6ம் தேதி வரை எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டன. செய்முறை தேர்வுகள் நடத்த தெளிவான அறிவிப்புகள் ஏதும் தராமல், அவசரகதியில் நடத்தி முடிக்க, அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பாலிடெக்னிக் பாடத்திட்டத்தை பொறுத்தவரை, 20 சதவீதம் எழுத்து தேர்வு, 80 சதவீதம் செய்முறை தேர்வுகள் உள்ளன. ஒரு கல்லுாரியில் சராசரியாக, 150 முதல், 200 செய்முறை தேர்வுகளை, துறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடத்த வேண்டியுள்ளது. மாணவர் ஒருவர், 8 செய்முறை தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்.
இந்நிலையில், 10ம் தேதி முதல், 23ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அட்டவணை தயாரித்து வழங்குவதற்கு கூட உரிய அவகாசம் அளிக்கப்படவில்லை என, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
பாலிடெக்னிக் கல்லுாரி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
கடந்த அக்டோபர் மாதம், தேர்வு முறைகளை தொழில்நுட்ப ரீதியாக ஒருங்கிணைக்க ஒரு மென்பொருள், 2 கோடி ரூபாய்க்கு, அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கொள்முதல் செய்தது. முன்னோட்ட சோதனை மேற்கொள்ளவில்லை.
இதில், மாணவர்கள் வருகை பதிவு, செய்முறை தேதி அட்டவணை தயாரிப்பு, ஆசிரியர்கள் பணி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளலாம் என கூறினர். ஆனால், இதை செயல்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.
அதை சரிசெய்கிறோம் என்ற பெயரில் தாமதம் ஏற்படுத்தி விட்டு, இறுதி சமயத்தில், சனி, ஞாயிறு உட்பட, 14 நாட்களில் அனைத்து செய்முறை தேர்வுகளையும் நடத்தவேண்டும் என கூறுவது சரியல்ல.
தவிர, ‘டைப்ரைட்டிங்’ தேர்வுகளும், எழுத்து தேர்வு ஆன்லைன் மதிப்பீடு பணியும், பாலிடெக்னிக் ஆசிரியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஒருபுறம் இருந்தாலும், மாணவர்கள் தேர்வுக்கு முறையாக தயாராக அவகாசம் அளிக்கவில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
