ADDED : மே 09, 2025 09:48 PM
சென்னை:புறநகர் மின்சார, 'ஏசி' ரயில் பயணியரிடம் வரவேற்பு பெற்றதை அடுத்து, இரண்டாவது, 'ஏசி' ரயில் தயாரிப்பு பணி, ஐ.சி.எப்., ஆலையில் துவக்கப்பட்டு உள்ளது.
சென்னை புறநகரில் முதல் முறையாக, 'ஏசி' மின்சார ரயில் இயக்கம், கடந்த மாதம், 19ம் தேதி துவங்கியது. பயணியரிடம் வரவேற்பை பெற்றுள்ளதால், ஐந்தாக இருந்த சர்வீஸ் எண்ணிக்கை, 10 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தெற்கு ரயில்வேக்கான இரண்டாவது மின்சார, 'ஏசி' ரயில் தயாரிப்பு பணி, அயனாவரம் ஐ.சி.எப்., ஆலையில் துவங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
கடற்கரை - செங்கல்பட்டு, 'ஏசி' மின்சார ரயிலில், தினமும், 3,000க்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர்.
தினசரி சேவையும் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், பயணியர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இதற்கிடையே, 2வது மின்சார, 'ஏசி' ரயில் வந்தவுடன், சென்னை - அரக்கோணம் தடத்தில் இயக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான கால அட்டவணை, ரயில் நிலையங்களின் நிறுத்தப்பட்டியல் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.