கருங்கல் ஜல்லி விலை உயர்வால் கட்டுமான செலவு அதிகரிக்கும் வல்லுநர் சங்கம் எதிர்ப்பு
கருங்கல் ஜல்லி விலை உயர்வால் கட்டுமான செலவு அதிகரிக்கும் வல்லுநர் சங்கம் எதிர்ப்பு
ADDED : ஏப் 25, 2025 12:23 AM
சென்னை:''குவாரி உரிமையாளர்கள் அறிவித்த கருங்கல் ஜல்லி விலை உயர்வால், கட்டுமான பணிகளுக்கான செலவு அதிகரிக்கும். அதனால், அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தமிழக பிரிவு தலைவர் கே.வெங்கடேசன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படையில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட குவாரி உரிமையாளர்கள், கருங்கல் ஜல்லி, எம் - சாண்ட் விலையை உயர்த்தி உள்ளனர்.
தன்னிச்சையான முடிவு
இதன்படி, ஒரு யூனிட் கருங்கல் ஜல்லி, 5,000 ரூபாய், எம் - சாண்ட், 6,000 ரூபாய் என, தலா, 1,000 ரூபாய் வீதம் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
திடீரென அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலை உயர்வால், கட்டுமானத் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தமிழக பிரிவு தலைவர் கே.வெங்கடேசன் கூறியதாவது:
குவாரி உரிமையாளர்கள் தன்னிச்சையாக கருங்கல் ஜல்லி விலை உயர்வை அறிவித்துள்ளனர். அரசிடம் அனுமதி பெற்றதாக, அவர்கள் கூறுவது உண்மையா என்ற சந்தேகம் எழுந்துஉள்ளது.
இந்த விஷயத்தில், தமிழக அரசு தரப்பில் இருந்து, எந்த பதிலும் வராத நிலையில், கட்டுமானப் பணிகளை தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கூடுதல் செலவு
கட்டுமானப் பொருட்களுக்கான, அரசின் விலைப்பட்டியலில், இந்த புதிய விலை சேர்க்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அப்படியே சேர்த்தாலும், புதிதாக அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு தான் இது பொருந்தும். ஆனால், தற்போதைய விலை உயர்வால், ஏற்கனவே துவங்கப்பட்ட பணிகளை தொடர்ந்து செயல்படுத்துவதில், கூடுதல் செலவு ஏற்படும்.
பொதுமக்களும் வீடு கட்ட உத்தேசித்து இருந்த பட்ஜெட்டில், கூடுதல் செலவு ஏற்படுவதால் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
குவாரி உரிமையாளர்களின் அராஜகப் போக்கை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, முதல்வரிடம் முறையிட இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.