கொரோனாவால் பலியானவர் உடலை தோண்டி மறு அடக்கம் செய்ய தடை
கொரோனாவால் பலியானவர் உடலை தோண்டி மறு அடக்கம் செய்ய தடை
ADDED : நவ 14, 2024 03:07 AM
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவரின் உடலை தோண்டி எடுத்து, சொந்த கிராமத்தில் மறு அடக்கத்துக்கு அனுமதித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை, பாடியைச் சேர்ந்தவர் ஆஸ்டின்; கொரோனா வைரஸ் பாதிப்பால், 2020 ஆகஸ்ட்டில் இறந்தார். அம்பத்துார் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
உடலை தோண்டி எடுத்து, கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் தாலுகாவில் உள்ள கல்லுகூட்டம் கிராமத்தில், மறு அடக்கம் செய்ய அனுமதி கோரி, ஆஸ்டின் மனைவி ஜெயா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அம்பத்துாரில் அடக்கம் செய்யப்பட்ட ஆஸ்டின் உடலை தோண்டி எடுத்து, சொந்த கிராமத்தில் மறு அடக்கம் செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத் துறை கூடுதல் அதிகாரி, மாநகராட்சி மண்டல அதிகாரி மேல்முறையீடு செய்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
அடக்கம் செய்து, 4 ஆண்டுகளுக்கு பின் மறு அடக்கத்துக்கு அனுமதி கோரப்பட்டது. அனைத்து சடங்குகளையும் மேற்கொண்டு உடல் அடக்கம் செய்யப்பட்ட பின், அதற்கு எந்த இடையூறும் செய்யக் கூடாது என, உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து சடங்குகள், பிரார்த்தனைக்குப் பின், உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கல்லறை கட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலின்போது, ஏராளமானோர் உயிரிழந்தனர். ஜெயாவின் கோரிக்கையை ஏற்றால், மற்றவர்களும் இதுபோன்ற கோரிக்கைகளுடன் வரலாம். எனவே, கடந்த செப்டம்பரில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தும், மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்குமாறு ஆஸ்டின் மனைவி ஜெயாவுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.