புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 2 ஆண்டுக்கு பின் திட்டத்திற்கு அனுமதி
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 2 ஆண்டுக்கு பின் திட்டத்திற்கு அனுமதி
ADDED : ஜூலை 02, 2025 12:50 AM
சென்னை:இந்தியாவில் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியில், தமிழகம் முன்னணியில் உள்ளது. நாட்டின் முதல் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்காவை விருதுநகரில் அமைக்க, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இடையே, 2023 மார்ச் 22ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பூங்காவுக்காக விருதுநகரில் 1,052 ஏக்கர் நிலத்தை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் ஒதுக்கியது.
அங்கு, ஜவுளி நிறுவனங்கள் தொழில் துவங்க, மத்திய - மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில், 2,061 கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதில், 500 கோடி ரூபாயை, மத்திய அரசு மானியமாக வழங்க உள்ளது.
இப்பூங்கா பணிகளை மேற்கொள்ள, 'பி.எம். மெகா இன்டக்ரேட்டட் டெக்ஸ்டைல் ரீஜியன்ஸ் அண்டு அப்பேரல் பார்க் தமிழகம்' என்ற சிறப்பு முகமை, 2024 பிப்ரவரியில் துவக்கப்பட்டது.
இந்த முகமையின் கீழ், பூங்கா அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும், 'மாஸ்டர் டெவலப்பராக' சிப்காட் நிறுவனத்தை, மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் நியமித்தது.
ஜவுளி பூங்காவில் உள்கட்டமைப்பு பணிகளை துவக்க அனுமதி வழங்குமாறு, ஜவுளி அமைச்சகத்தை தமிழக அரசு வலியுறுத்தி வந்தது. இதற்கு, தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தொழில் துறை அமைச்சர் ராஜா வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழக குழுவின் தொடர் பேச்சுக்கு பின், மத்திய ஜவுளி அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமையிலான குழு, விருதுநகரில் 1,894 கோடி ரூபாயில் ஜவுளி பூங்கா அமைக்க அனுமதி அளித்துள்ளது. அங்கு, பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; 10,000 படுக்கைகளுடன் பணியாளர்கள் தங்குமிடம் போன்றவை அமைக்கப்படும். வரும் 2026 செப்டம்பரில் பணிகள் நிறைவடையும்.
இப்பூங்கா வாயிலாக, 10,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.