தரைமட்டம், மேல்தள நிலையில் சான்று கட்டாயம்; பொறியாளர்களுக்கு டி.டி.சி.பி., கிடுக்கிப்பிடி
தரைமட்டம், மேல்தள நிலையில் சான்று கட்டாயம்; பொறியாளர்களுக்கு டி.டி.சி.பி., கிடுக்கிப்பிடி
ADDED : ஜன 01, 2024 04:43 AM
சென்னை : புதிய கட்டடங்கள் கட்டும் போது, விதிமீறலை தடுக்க, தரைமட்டம், மேல்தள நிலையில், பொறியாளர்களின் சான்றிதழ் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சென்னை பெருநகருக்கு வெளியில் உள்ள பகுதிகளில், கட்டுமான திட்டங்களுக்கு, நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., ஒப்புதல் அளித்து வருகிறது. பொது கட்டட விதிகளின் அடிப்படையில், திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.
இதில், விதிமீறல்களை தடுக்க, ஒவ்வொரு திட்டத்திலும், தொழில்முறை வல்லுனர்கள் என்ற அடிப்படையில், பொறியாளர்கள் பங்கேற்பு கட்டாயம். இதற்காக, தொழில்முறை வல்லுனர்கள் பதிவு செய்யும் நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கட்டுமான திட்டத்துக்கு டி.டி.சி.பி., ஒப்புதல் அளித்தால், அதில், ஒவ்வொரு நிலையிலும் விதிகளின்படி பணிகள் நடக்கின்றன என்பதை, பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான பொறியாளர்கள் கடைப்பிடிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, நகரமைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொது கட்டட விதிகளின்படி, 10,000 சதுரடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களை கட்ட, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் ஒப்புதல் அளிக்கலாம். இதில், ஒப்புதல் வழங்கிய பின், பணி நிறைவு சான்று வரும் போது தான், அதன் நிலவரம் அதிகாரிகளின் கவனத்துக்கு வருகிறது.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் விதிமீறல்கள் இருந்தால், அதை தடுக்க வேண்டியது அவசியம். பொது கட்டட விதிகளின்படி, திட்ட அனுமதிக்கு, பதிவு செய்த பொறியாளர் வாயிலாகவே விண்ணப்பங்கள் வருகின்றன.
இதில், கட்டடத்தின் அஸ்திவாரத்துக்கு அடுத்த நிலையில், தரைமட்டம் வரை நடந்த பணியில் விதிமீறல்கள் இல்லை என்பதை, சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் சான்றிதழ் அளிக்க வேண்டும்.
இதற்கு அடுத்து, மேல்தள பணி நடக்கும் போதும், விதிமீறல் இல்லை என்பதை பொறியாளர் சான்றிதழ் அளிக்க வேண்டும்.
புதிய கட்டட அனுமதி பெற்றவர்கள், இந்த நடைமுறையை கடைப்பிடிப்பது கட்டாயம். டி.டி.சி.பி., அறிவுறுத்தல் அடிப்படையில், அனைத்து மாநகராட்சி நிர்வாகங்களும், இதற்கான உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. இதனால், குடியிருப்பு கட்டடங்களில், விதிமீறல்கள் ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.