விளை நிலங்களுக்கு இடையே 'பிளாட்' அனுமதி தரக்கூடாது என எதிர்ப்பு
விளை நிலங்களுக்கு இடையே 'பிளாட்' அனுமதி தரக்கூடாது என எதிர்ப்பு
ADDED : ஜூலை 02, 2025 01:10 AM
நாமக்கல்:'விளை நிலங்களுக்கு இடையே, வியாபார நோக்கத்திற்காக செயல்படும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் வீட்டுமனை பிரிவிற்கு, அங்கீகாரம் மற்றும் அனுமதி அளிக்க வேண்டாம்' என, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம், தெற்கு வயக்காடு பகுதியை சேர்ந்த நாங்கள், விவசாயம் செய்து வருகிறோம். தற்போது, 'ரியல் எஸ்டேட்' தொழில் செய்யும் சிலர், எங்களின் விவசாய நிலத்தை ஒட்டிய பகுதியில், வீட்டுமனை பிரித்து வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனால், விவசாய நிலத்தில் கழிவுநீர் தேங்குதல், கிணற்று நீர் மாசுபடுதல், நீர் பற்றாக்குறை ஏற்பட்டு விளைச்சல் பாதிப்பு போன்ற அபாயம் உள்ளது.
இதுகுறித்து தெரிந்தும், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் போக்கை வன்மையாக கண்டிப்பதோடு, அவர்களின் நடவடிக்கைகளுக்கு, தாங்கள் அனுமதி வழங்க வேண்டாம்.
மேலும், இங்கு அமைக்கப்படும் மனைகளுக்கான பொது சாலையை, ராமசாமி என்பவரின் பட்டாவில் உள்ள குறுகிய 10 அடி பாதையில் இணைக்கின்றனர். அவ்வாறு இணைக்கும்பட்சத்தில், விவசாய பணிகள் பாதிப்பதோடு, சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சட்டத்திற்கு புறம்பாக உள்ள இந்த வீட்டுமனை பிரிவிற்கு, எந்த அங்கீகாரமும், அனுமதியும் வழங்க வேண்டாம். எங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்காத பட்சத்தில், அறவழி போராட்டம் உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.