சாத்தான்குளம் கொலை வழக்கு இன்ஸ்., அப்ரூவராக எதிர்ப்பு
சாத்தான்குளம் கொலை வழக்கு இன்ஸ்., அப்ரூவராக எதிர்ப்பு
ADDED : ஜூலை 25, 2025 01:43 AM

மதுரை:துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கப்பட்டதில், 2020 ஜூன் 19ல் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 போலீசார் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
நீதிமன்றத்தில் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவில், 'குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அரசு, காவல் துறைக்கு நேர்மை, உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் அப்ரூவராக - அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன்.
'என்னை தவிர்த்து மற்ற போலீசார் சம்பவத்தின் போது செய்தது குறித்த உண்மையை நீதிமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்' என, குறிப்பிட்டார்.
மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி முத்துக்குமரன் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதர் ஆஜர்படுத்தப்பட்டார்.
சி.பி.ஐ., தரப்பு, 'வழக்கில் முதலாவது எதிரியாக ஸ்ரீதர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன. தன் தரப்பு தவறை மறைக்க மற்ற எதிரிகள் மீது ஸ்ரீதர் குற்றம் சாட்டுகிறார். மனு ஏற்புடையதல்ல' என, தெரிவித்தது.
ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பு, 'வழக்கிலிருந்து தப்பிக்கும் நோக்கில் ஸ்ரீதர் மனு செய்துள்ளார். மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, விவாதம் நடந்தது. நீதிபதி ஜூலை 28க்கு வழக்கை ஒத்திவைத்தார்.

