ADDED : அக் 05, 2024 12:58 AM
வாலிபர் உடலை பெற மறுத்து 2வது நாளாக போராட்டம்
பெருந்துறை, அக். 5-
காஞ்சிக்கோவில் அருகேயுள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்த நல்லசாமி மனைவி சாந்தாமணி, 50; காஞ்சிக்கோவில், முள்ளம்பட்டி, வரவங்காட்டை சேர்ந்தவர் ரஞ்சித், 23; இருவரும் அதே பகுதி தனியார் நிறுவன தொழிலாளர்கள். வேலை முடிந்து பைக்கில் சென்றபோது, கத்தியை காட்டி மிரட்டி, ரஞ்சித் பாலியல் தொந்தரவு அளித்ததாக, காஞ்சிக்கோவில் போலீசில் சாந்தாமணி புகாரளித்தார். விசாரித்த போலீசார் ரஞ்சித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த செப்., 10ம் தேதி ஜாமினில் வந்தவர், சாந்தாமணி பொய் புகார் கொடுத்து விட்டதாக கூறி வந்தார். இந்நிலையில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், நேற்று முன்தினம் உடற்கூறு பரிசோதனை நடந்தது. உண்மை நிலையை விசாரித்து வழக்குப்பதிவு செய்யுமாறு கூறிய உறவினர்கள், உடலை வாங்க மறுத்து விட்டனர்.
மருத்துவமனை வளாகத்தில் இரண்டாவது நாளாக நேற்றும், போராட்டத்தை தொடர்ந்தனர். பெருந்துறை டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் தெய்வராணி பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் அடையவில்லை.
'பொய் புகார் தந்த சாந்தாமணி, சாந்தாமணி சகோதரர் தம்பான், தவறான விசாரணை செய்த விசாரணை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை பெற மாட்டோம்' என உறவினர்கள் திட்டவட்டமாக கூறி கலைந்து சென்றனர்.