வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி போராட்டம்: அர்ஜுன் சம்பத்
வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி போராட்டம்: அர்ஜுன் சம்பத்
ADDED : ஆக 11, 2025 05:33 AM

சென்னை: 'ராமரை சித்த சுவாதீனம் இல்லாதவர் என்று பேசிய வைரமுத்துவை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், ஜனநாயக அறப் போராட்டங்கள் நடக்கும்' என, ஹிந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வைரமுத்துவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்:
ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை கம்பன் கழகம் நடத்திய விருது வழங்கும் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்று, கம்பர் பாடலில் பயன்படுத்திய திகைத்தல் என்ற வார்த்தைக்கு, சித்த சுவாதீனம் இல்லாதவர், பைத்தியம் என்ற பொருள்படும்படி பேசி, கடவுளாகப் போற்றப்படும் ராமரை இழிவு படுத்தி உள்ளார்.
சித்த சுவாதீனம்
அவர், வேண்டுமென்றே ஸ்ரீராம பக்தர்களின் மனம் புண்படும்படி பேசி உள்ளார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அரசும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் காலத்தில், மக்கள் மன்றத்தில் தண்டிக்கப் படுவார்.
திகைத்தல் என்ற வார்த்தைக்கு, சித்த சுவாதீனம் இல்லாதவர் என்ற பொருள் எந்த அகராதியில் உள்ளது என்பதை, வைரமுத்து தெரிவிக்க வேண்டும்.
தொடர்ச்சியாக ராமரையும், சீதையையும் இழிவுப்படுத்தி, இறை நம்பிக்கை உள்ளவர்களை உள்நோக்கத்துடன் புண்படுத்தி வருகிறார் வைரமுத்து. இது கண்டிக்கத்தக்கது.
வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, ஜனநாயக அறப்போராட்டங்கள் நடத்தப்படும்.
மனநல மருத்துவமனை
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி:
வைரமுத்து ஒரு முட்டாள். ராமரை குற்றவாளி என வாலி சொன்னாராம். தம்பி மனைவியை, தன் மனைவி என சொந்தம் கொண்டாடியவனை பின்னிருந்து கொன்றால் என்ன? வலமிருந்து கொன்றால் என்ன? இடமிருந்து கொன்றால் என்ன? ராமாயணத்தில் குற்றவாளி வாலி. நீதி வழங்கியது ராமன்.
நீதிபதியை தவறிழைத்து விட்டதாக சொல்லும் ஒரு குற்றவாளியை ஆதரித்து பேசுபவருக்கும், அவருக்கு விருது வழங்குவோருக்கும் தான் புத்தி பேதலித்து விட்டது.
வைரமுத்துவை அரசு செலவில், மனநல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது நல்லது. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை நாயகன் ராமரை அவதுாறு செய்தோர், கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் .
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.