தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை
தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை
ADDED : ஜூலை 20, 2024 03:11 PM

திண்டிவனம்: 'இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில், ஏற்கனவே 7 நாட்கள் நடத்திய சாலை மறியலை விட, கடுமையான போராட்டத்தை நடத்தினால்தான் இந்த அரசு பணியும் என நினைக்கின்றேன்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
வன்னியர் சங்கத்தின் 45ம் ஆண்டு விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், வன்னியர் சங்க கொடியை ஏற்றிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். பட்டியல் இன மக்களுக்கு 22 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். வன்னியர் சங்கம் துவங்கிய போதே இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இடஒதுக்கீடு கிடைப்பதற்காக சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என தற்போதுள்ள முதல்வரை கோட்டையில் நான் நேரில் சந்தித்து முறையிட்டும், இன்று வரை நிறைவேறவில்லை.
இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில், ஏற்கனவே 7 நாட்கள் நடத்திய சாலை மறியலை விட, கடுமையான போராட்டத்தை நடத்தினால்தான் இந்த அரசு கொடுக்கும் அல்லது பணியும் என நினைக்கின்றேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார். மாநில வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, பா.ம.க., கவுரவ தலைவர் மணி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

