அனைத்து பா.ஜ., அலுவலகங்களுக்கு பாதுகாப்பு தரவும்: நயினார் நாகேந்திரன்
அனைத்து பா.ஜ., அலுவலகங்களுக்கு பாதுகாப்பு தரவும்: நயினார் நாகேந்திரன்
ADDED : ஏப் 22, 2025 11:19 PM
சென்னை:'மக்களிடையே வெறுப்புணர்வை துாண்டும், சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து, அனைத்து பா.ஜ., அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
வக்ப் திருத்த சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறி, தி.மு.க.,வின் ஆதரவு அமைப்பான, ஆதித்தமிழர் கட்சியினர், பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்து, வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழக பா.ஜ., அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
முஸ்லிம்களின் உரிமைகளையும், அவர்களின் நலனையும் ஒரு சேர பாதுகாக்கும், இச்சட்டத்தை முழு மனதோடு ஆதரிப்பதாக, நாட்டின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும், அறிஞர்களும், தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வேலையில், தி.மு.க., அரசின் நிழலில் இருக்கும், ஒரு சில அமைப்புகளுக்கு, இது போன்று வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் தைரியம் எங்கிருந்து வந்தது. ஒரு வேளை ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால், தி.மு.க., அரசே ஆதித்தமிழர் கட்சியினரை துாண்டிவிட்டு, இந்த போராட்டம் அரங்கேற்றப்பட்டதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது.
காரணம் பார்லிமென்ட் கூட்டு குழுவிலும், பார்லிமென்டிலும் பல மணி நேரம் விவாதம் நடந்த பின்பே, வக்ப் சட்ட திருத்த மசோதாவானது, சட்டமாக அமல்படுத்தப்பட்டது. இந்த திருத்த சட்டம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இதுபோன்ற திடீர் போராட்டங்களும், அதில் பிரதமரின் உருவப்படங்கள் எரிக்கும் வன்முறைகளும் எதற்கு? இது போன்ற செயல்பாடுகள், மக்கள் மத்தியில் ஒரு பதற்ற சூழலை உண்டாக்குவதுடன், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியாதா?
எனவே, தமிழக மக்களிடையே வெறுப்புணர்வை துாண்டும், இது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகள், இனியும் நடக்காமல் தடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பா.ஜ., அலுவலகங்களுக்கும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பாதுகாப்பை, முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

