'சிக்னல்' கிடைக்காத இடங்கள் சர்வே எடுக்குது பி.எஸ்.என்.எஸ்.,
'சிக்னல்' கிடைக்காத இடங்கள் சர்வே எடுக்குது பி.எஸ்.என்.எஸ்.,
ADDED : அக் 31, 2025 02:59 AM

சென்னை:  தமிழகத்தில் மாவட்டம் வாரியாக, மொபைல் சிக்னல் கிடைக்காத இடங்கள் எத்தனை உள்ளன என, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சர்வே எடுக்க உள்ளது.
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., குறைந்த விலையில் ரீசார்ஜ் கட்டணங்களை வழங்கி வருகிறது. எனினும், பெரும்பாலான இடங்களில், 'சிக்னல்' கிடைக்காமல், வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு, பழைய உள்கட்டமைப்புடன் கூடிய டவர்களே காரணம் என்று கூறப்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, தமிழகத்தில் மாவட்டம் வாரியாக, சிக்னல் கிடைக்காத இடங்கள் எத்தனை உள்ளன என கண்டறிய, பி.எஸ்.என்.எல்., தமிழக வட்டம் சார்பில், சர்வே எடுக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:
வாடிக்கையாளர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இணையதள சேவையில் வேகம் இல்லை என, தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு புகார்கள் வருகின்றன. இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட உள்ளது.
மாநிலம் முழுதும் எந்தெந்த இடங்களில், 'சிக்னல்' பிரச்சனை உள்ளது என, சர்வே எடுக்கும்படி, மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணி டிசம்பரில் துவங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

