திருவண்ணாமலையில் பக்தர்கள் மருத்துவ பயன்பாட்டிற்கு 'கியூ ஆர் கோடு'
திருவண்ணாமலையில் பக்தர்கள் மருத்துவ பயன்பாட்டிற்கு 'கியூ ஆர் கோடு'
ADDED : டிச 13, 2024 01:21 AM
சென்னை:'திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி, மருத்துவ முன்னேற்பாடுகளை, 'கியூ ஆர் கோடு' வழியாக அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
திருவண்ணாமலை மகா தீபம் இன்று மாலை 6:00 மணிக்கு ஏற்றப்பட உள்ளது. தீபத்திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அவர்கள் வசதிக்காக, மருத்துவ சேவைக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில், 14 கி.மீ., தொலைவு கிரிவலப்பாதையில் 37; தற்காலிக பேருந்து நிலையத்தில் 23; வெளிவட்ட சாலையில் எட்டு; அணுகு சாலையில் 22 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய குழுவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'கியூ ஆர்' கோடை ஸ்கேன் செய்தால், ஒவ்வொரு இடங்களுக்கும் வெவ்வேறு வண்ணங்களில், எங்கெங்கு மருத்துவ முகாம்கள் உள்ளன என்ற விபரங்களை மொபைல் போனில் அறியலாம். அதேபோல், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 45 ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இது தவிர, 15 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் இருப்பிடங்களையும் 'கியூ ஆர்' கோடு வழியாக தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

