க்யூ.எஸ்., நிலைத்தன்மை தர வரிசை வி.ஐ.டி., பல்கலை சாதனை
க்யூ.எஸ்., நிலைத்தன்மை தர வரிசை வி.ஐ.டி., பல்கலை சாதனை
UPDATED : நவ 18, 2026 09:51 PM
ADDED : நவ 18, 2026 09:48 PM
சென்னை: க்யூ.எஸ்., நிலைத்தன்மை தர வரிசையில், வி.ஐ.டி., பல்கலை உலகளவில் சாதனை படைத்துள்ளது.
இது குறித்து, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட்ட செய்தி:
உலக பல்கலைகளின் நிலைத்தன்மை பிரிவுக்கான தர வரிசை பட்டியலை, க்யூ.எஸ்., அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், ஒட்டு மொத்தமாக, 81.2 மதிப்பெண்கள் பெற்று, வி.ஐ.டி., பல்கலை, கடந்த ஆண்டை விட, 59 இடங்கள் முன்னேறி, உலகளவில் 293வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அளவில், ஐந்தாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு, உலகளவில் 352வது இடம், இந்திய அளவில் 7ம் இடம் பிடித்திருந்தது. 2027ம் பதிப்பில், க்யூ.எஸ்., உலக பல்கலை தரவரிசையில், 2,000 பல்கலைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. அதில், வி.ஐ.டி., பல்கலை, உலகின் முதல் 300 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.
வி.ஐ.டி., வளாகத்தில், சோலார் கார் வாகன நிறுத்தம் இடத்தில், 441 கிலோவாட் சோலார் மின்தகடு கூரை கட்டமைப்பு ஏற்படுத்தி, ஆண்டுதோறும் 650 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 470 டன் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.
மாணவ, மாணவியர் விடுதிகளில் சேகரிக்கப்படும் உணவுக்கழிவுகள், மறு சுழற்சி செய்து, 200 கிலோ வாட் மணி நேர மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும், 15 டன் மரக்கழிவுகள், எரிசக்தியாக மாற்றப்படுகின்றன. வி.ஐ.டி., வளாகம் முழுதும், மரங்கள் நடப்பட்டு பசுமையாக இருப்பதால், உள்நாட்டு மற்றும் பருவகால பறவைகளின் புகலிடமாக திகழ்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
