கல் குவாரிகள் வேலை நிறுத்தம் கட்டுமான தொழில் முடங்கும் அபாயம்
கல் குவாரிகள் வேலை நிறுத்தம் கட்டுமான தொழில் முடங்கும் அபாயம்
UPDATED : ஏப் 17, 2025 03:07 AM
ADDED : ஏப் 17, 2025 01:25 AM

கோவை:கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டத்தால், கட்டுமான தொழில் ஸ்தம்பிப்பதுடன், பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.
கனிமவளத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள புதிய நடைமுறையை, தமிழக அரசு திரும்ப பெற, குவாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னர், குவாரியில் இருந்து கல் உடைத்துவர கொடுக்கும் நடைச்சீட்டுக்கு, அரசுக்கான வரி, கன மீட்டர் அடிப்படையில் இருந்தது. இதை, ஜி.எஸ்.டி.,யுடன் மெட்ரிக் டன் முறையில் அமல்படுத்தி, மார்ச் 12ல் மாற்றப்பட்டுள்ளது.
இதை ரத்து செய்து, பழைய கன மீட்டர் முறையை அமல்படுத்த வேண்டும்; சிறு கனிம நில வரியை ரத்து செய்ய வேண்டும் உட்பட, 24 கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுதும் குவாரி உரிமையாளர்கள், நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
'பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா' கோவை கிளை முன்னாள் தலைவர் லட்சுமணன் கூறியதாவது:
கோவையில் தற்போது கட்டுமான தொழில் நன்றாக உள்ள சூழலில், குவாரி உரிமையாளர்கள் போராட்டத்தால், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட துவங்கி விட்டது. எம்.சாண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலையை அவர்கள் உயர்த்தி விட்டனர்.
இன்னும் ஒரு வாரத்தில், பாதிப்பு உச்சத்துக்கு சென்று விடும். பொருட்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்குள் குவாரி உரிமையாளர்களிடம் அரசு பேச்சு நடத்தி, போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.