சட்டவிரோத பண பரிமாற்றம் தொழில் அதிபர்கள் வீடுகளில் 'ரெய்டு'
சட்டவிரோத பண பரிமாற்றம் தொழில் அதிபர்கள் வீடுகளில் 'ரெய்டு'
ADDED : மே 07, 2025 12:35 AM

சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சுற்றுச்சூழல் துறை முன்னாள் அதிகாரி பாண்டியன் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, தொழில் அதிபர்களின் வீடு, அலுவலகம் என, 10க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
கண்காணிப்பாளர்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் பாண்டியன் 60. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள, சுற்றுச்சூழல் துறை இயக்குநரகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
இவரது வீடு, சென்னை, சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ளது. கடந்த 2020 டிசம்பரில், லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, 1.37 கோடி ரூபாய் ரொக்கம், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் விசாரணையில், அவர் அதிக அளவில் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. உடனடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதன்பின், ஓய்வு பெற்றார்.
தற்போது, பாண்டியன் விவகாரத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
பாண்டியனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, தொழில் அதிபர்களின் பட்டியலையும் தயாரித்துள்ளனர்.
அதில், தமிழக அரசின் வனம், தொழில், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடையவர்கள், மருந்து கொள்முதல் தொழில் செய்வோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
டாக்டர் வீடு
அதன் அடிப்படையில், சென்னை மற்றும் வேலுாரில், 10க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்களின் வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
சென்னையில் உள்ள பாண்டியன் வீடு; சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள, தொழில் அதிபர் ஏ.கே.நாதன் வீடு; அசோக் நகரில் அவர் நடத்தி வரும், பயோ மெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம்; சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், தொழில் அதிபர் குணசேகரன் வீடு; கோயம்பேடு ஜெய் நகரில், அவர் நடத்தி வரும் நிறுவனம்.
சென்னை, கே.கே.நகர் டாக்டர் ரங்கசாமி சாலையில், டாக்டர் ராஜ்குமார் வீடு; திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், அன்னை இந்திரா நகரில் உள்ள சதாம் உசேன் என்பவர் வீடு போன்றவற்றில், அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
பாண்டியன் தொடர்புடைய, தனியார் சுற்றுச்சூழல் ஆலோசனை மையத்தில், சதாம் உசேன் பணிபுரிந்து வரும் நிலையில், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
அவரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.