ADDED : ஜூன் 15, 2025 06:28 AM

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை:
தென்மாநில பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு, 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழையும், கோவை, திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகளிலும், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், இன்று மிக கன மழை பெய்யும்.
ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோல், வரும் 20ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும். குறிப்பாக, கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை நீடிக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.