இன்று இடி மின்னலுடன் மழை; 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவக்கம்
இன்று இடி மின்னலுடன் மழை; 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவக்கம்
ADDED : மே 01, 2025 06:52 AM

சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தில் ஒரு சில இடங்களில், மே, 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை, 37 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும்.
நேற்று மாலை நிலவரப்படி, வேலுாரில் அதிகபட்சமாக, 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, கரூர் பரமத்தியில், 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவியது. சென்னை மீனம்பாக்கம், தர்மபுரி, ஈரோடு, மதுரை விமான நிலையம், சேலம், திருச்சி நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.