தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் காற்றுடன் மழை பெய்யும்
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் காற்றுடன் மழை பெய்யும்
ADDED : மே 18, 2025 06:48 AM

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்துார், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், கடலுார் மாவட்டம் பெலாந்துறையில், தலா 7 செ.மீ., மழையும், திருவண்ணாமலை போரூர், வேலுார் மாவட்டம் விரிஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி., அணை, திருப்பத்துார் மாவட்டம் வடபுதுப்பட்டில் தலா 6 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
இதேபோல, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலுார், காஞ்சிபுரம், தஞ்சாவூர், கடலுார், கோவை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.
இதற்கிடையே, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யும். குறிப்பாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், கோவை, சேலம், நீலகிரி, கள்ளக்குறிச்சி, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.