UPDATED : செப் 07, 2025 06:19 AM
ADDED : செப் 07, 2025 06:17 AM

சென்னை: 'தமிழகத்தில் வரும் 12ம் தேதி வரை மழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் வடக்கு, தெற்கு மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டம் பந்தலுார் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ., மழை பதிவானது.
தென் மாவட்ட பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் 12ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, திருச்சி, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுதினம், கோவை மாவட்டத்தில் மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிப்பேட்டை, வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும் 10ம் தேதி, சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, ராணிப்பேட்டை, வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.