காஞ்சியில் 60 இடங்களை சூழ்ந்த மழைநீர்: நிவாரண முகாம்களில் 333 பேர் தங்க வைப்பு
காஞ்சியில் 60 இடங்களை சூழ்ந்த மழைநீர்: நிவாரண முகாம்களில் 333 பேர் தங்க வைப்பு
ADDED : டிச 01, 2024 05:54 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த கனமழையால், 60 இடங்களில் மழைநீர் தேங்கியும், 14 மரங்கள் விழுந்தும், நான்கு கால்நடைகள் பலியாகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிவாரண முகாம்களில் 333 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். குன்றத்துார் தாலுகாவில், வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும் பணியை, கலெக்டர் கலைச்செல்வி முடுக்கி விட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'பெஞ்சல்' புயல் காரணமாக, நேற்று அதிகாலை முதலே கனமழை பெய்ய துவங்கியது. மாவட்டம் முழுதும் இடைவிடாது கனமழை கொட்டியது.
இதனால், சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் சென்றது. மழை காரணமாக கடைகள் பல இயங்கவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழை, வெள்ளம் பாதிக்கும் 72 இடங்களையும், 21 மண்டல குழு அதிகாரிகள் நேற்று கண்காணித்து வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண, சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவுகள் சென்றன.
குன்றத்துார் ஒன்றியம், வரதராஜபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் கலெக்டர் கலைச்செல்வி, மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்து முடுக்கி விட்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான கந்தசாமி, செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்து, 24 மணி நேரமும் ஏரியை கண்கணிக்க உத்தரவிட்டார்.
மாவட்டத்தில், தாழ்வான இடங்களில் வசிக்கும், 96 குடும்பங்களைச் சேர்ந்த, 333 பேரை, 13 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, பாய், தலையணை போன்றைவை வழங்கப்பட்டுள்ளன.
குன்றத்துார் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் வசிப்போரை மீட்க, 20 படகுகைளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், உத்திரமேரூரில் அதிகபட்சமாக, 16.5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் தாயாரம்மன் குளக்கரை சாலையோரம் இருந்த 20 ஆண்டு பழமையான காட்டுவா வகை மரம் ஒன்று சாலையில் விழுந்ததால், போக்குவரத்து தடைபட்டது.
இதேபோல், காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலை, காந்தி நகரில், சாலையோரம் இருந்த பழமையான புளியமரம் வேருடன் சாய்ந்தது. மரங்களை தீயணைப்பு துறையினர் அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது.
புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தில் பள்ளத்தில் விழுந்த பசுவை தீயணைப்பு துறையினர் பசுவை மீட்டனர். இரட்டை மண்டபம் சிக்னல் அருகிலும், ரங்கசாமிகுளக்கரை, டி.கே.நம்பி தெரு ஆகிய இடங்களிலும், மழைநீர் கால்வாய்களை கொட்டும் மழையில், நெடுஞ்சாலைத் துறையினர் சீர் செய்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதனின், 22வது வார்டில், பழைய சாலையை அகற்றாமல், புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டதால், அங்குள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மாநகராட்சி அதிகாரிகள், தற்காலிகமாக கால்வாய் வெட்டி, மழைநீரை அகற்றினர்.
வாலாஜாபாத்
வாலாஜாபாத் அருகே, திம்மராஜம்பேட்டை பிரதான சாலையில், சாமிநாதன், 50, என்பவரது ஓட்டு வீடு ஒரு பகுதி இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால், அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
உத்திரமேரூர்
உத்திரமேரூர் தாலுகா, களியாம்பூண்டி, ராவுத்தநல்லுார், இளநகர் கிராம பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் 100க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆணைப்பள்ளம் பகுதியில், மா மரம் முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது. இதேபோல, எண்டத்துார் சாலையில் காற்றினால் மின் கம்பி அறுந்து விழுந்தது. மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டதால், உயிர்சேதம் ஏற்படவில்லை.
குன்றத்துார்
குன்றத்துார் அருகே சோமங்கலம் பெரிய ஏரி நிரம்பி, உபரி நீர் அளவில் வெளியேறி வருகிறது. இந்த உபரி நீர் அடையாறு கால்வாய் வழியே வரதராஜபுரம் பகுதியை கடந்து செல்கின்றது.
வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட புவனேஸ்வரி நகர், ராயப்பா நகர், அஷ்டலட்சுமி நகர், பி.டி.சி., காலனி உள்ளிட்ட பல்வேறு நகரில் உள்ள காலி நிலத்தில் வெள்ள நீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது.
பலர் கார்களை வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள பாலங்கள் மீது நிறுத்தியுள்ளனர். மணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கஜலட்சுமி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பதிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் புகார் தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 044 27237107; வாட்ஸாப் எண்:8056221077.
- நமது நிருபர் குழு -