தஞ்சையில் ஆகஸ்ட் 3ல் ராஜராஜ சோழன் முடிசூட்டு பெருவிழா
தஞ்சையில் ஆகஸ்ட் 3ல் ராஜராஜ சோழன் முடிசூட்டு பெருவிழா
ADDED : ஜூலை 21, 2025 01:30 AM
சென்னை: தஞ்சாவூர் தமிழ்ச் சங்கம், சோழமண்டல வரலாற்று தேடல் குழு சார்பில், தஞ்சை பெரிய கோவிலில், ஆகஸ்ட், 3ல், ராஜராஜ சோழன் முடிசூட்டு பெருவிழா நடைபெற உள்ளது.
ராஜராஜ சோழன் ஆடிப்பெருக்கு நாளில், மன்னராக முடிசூட்டிக் கொண்டார். அவர் முடிசூடிய, 1040வது ஆண்டை கொண்டாடும் வகையில், தஞ்சை பெரிய கோவிலில், ஆகஸ்ட், 3ல், ராஜராஜ சோழன் முடிசூட்டு பெருவிழாவை, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கமும், சோழமண்டல வரலாற்று தேடல் குழுவும் நடத்த உள்ளன.
இதில், சோழர் வரலாற்றை எழுதிய, மறைந்த அறிஞர் தி.வை.சதாசிவபண்டாரத்தாருக்கு, ராஜராஜ சோழன் விருது, மத்திய தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் வெங்கடேசன், தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம், தமிழக தொல்லியல் துறை முன்னாள் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட உள்ளன.
அதேபோல், ராஜராஜ சோழனின் மகனும், மாமன்னருமான ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, ஆடி திருவாதிரை நாளான 23ல், மத்திய தொல்லியல் துறை சார்பில், அரியலுார் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட உள்ளது. அதன் நிறைவு நாளான, 27ம் தேதி, பிரதமர் மோடி பங்கேற்று, கங்கைகொண்ட சோழபுரம் கோவில் பொறிக்கப்பட்ட சிறப்பு நாணயத்தை வெளியிட உள்ளார்.