ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள் : தி.மு.க., அறிவிப்பு
ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள் : தி.மு.க., அறிவிப்பு
UPDATED : மே 29, 2025 11:31 AM
ADDED : மே 28, 2025 11:46 PM

சென்னை :ராஜ்யசபா தேர்தலுக்கான தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ம.தி.மு.க., தலைவர் வைகோவுக்கு கதவு சாத்தப்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தை சுமக்க விரும்பாத மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனுக்கு, ஒரு சீட் கொடுத்துள்ளது.
'வரும் ஜூன் 19ல் நடக்கவுள்ள ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களில் வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவர். 'மற்றுமுள்ள ஒரு இடம், ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படுகிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தற்போது எம்.பி.,யாக உள்ள வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அப்துல்லா, சண்முகம் ஆகியோருக்கு மறுவாய்ப்பு தரவில்லை.
உதயநிதிக்கு நெருக்கமான அப்துல்லா, மூன்றரை ஆண்டுகள் மட்டுமே எம்.பி.,யாக இருந்தார். அதனால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், அவரது சமூகத்தை சேர்ந்த சல்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலரான சிவலிங்கம், இருமுறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் சொந்த மாவட்டத்தை சேர்ந்தவர்.
கவிஞர், எழுத்தாளர் சல்மா, பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவராக இருந்தவர். 2006ல் மருங்காபுரி தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தவர். 2006 முதல் 2011 வரை, தமிழ்நாடு சமூக நல வாரிய தலைவராக பணியாற்றினார். வில்சன் கிறிஸ்துவர். சிவலிங்கம் ஹிந்து. சல்மா முஸ்லிம்.
தமிழகத்தில் காலியாகும் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, ஜூன் 19ல் தேர்தல் நடக்கிறது. ஜூன் 2 முதல் 9 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
தி.மு.க., மூன்று வேட்பாளர்களை அறிவித்து, ஒரு இடத்தை கமலுக்கு வழங்கியுள்ளதால், இரண்டு இடங்களில் அ.தி.மு.க., எளிதாக வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதால், ஓட்டுப்பதிவுக்கு வாய்ப்பு இல்லை.
வைகோ ஏன் இல்லை?
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்காமல்,ராஜ்யசபாவில் இப்போதுள்ள, 10 எம்.பி.,க்கள் எண்ணிக்கையை, தி.மு.க., தக்க வைத்துள்ளது. இதனால் ராஜ்யசபாவில், நான்காவது பெரிய கட்சியாக, தி.மு.க., உள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி., கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ம.தி.மு.க.,வுக்கு ஒரு தொகுதியுடன், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்பட்டது. அதன்படி, தி.மு.க., ஆதரவில் வைகோ ராஜ்யசபா எம்.பி.,யானார்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலிலும், ம.தி.மு.க..வுக்கு ஒரு தொகுதிதான் ஒதுக்கப்பட்டது. அதனால், மீண்டும் வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி., கிடைக்கும் என, அக்கட்சியினர் நம்பிக்கையுடன் இருந்தனர். லோக்சபா தேர்தலில் மகன் துரைக்காக, திருச்சி தொகுதியை கேட்டு வாங்கியதால், உங்களுக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி., பதவி தரமாட்டோம் என அப்போதே வைகோவுக்கு சொல்லி விட்டோம் என ஒரு சீனியர் அமைச்சர் தெரிவித்தார்.
தி.மு.க., வேட்பாளர்கள் விபரம்:
பி.வில்சன்
பிறந்த தேதி: 6.6.1966தந்தை: புஷ்பநாதன்தாய்: அமலாமனைவி: வான்மதிகல்வி : பி.எஸ்.சி., - பி.எல்.,தொழில்: வழக்கறிஞர்தற்போதைய பதவி: ராஜ்யசபா எம்.பி.,
ரொக்கையா மாலிக் என்கிற கவிஞர் சல்மா
பிறந்த தேதி: 19.12.1967தந்தை: சம்சுதீன்தாய்: சர்புன்னிசாகணவர்: அப்துல் மாலிக்சொந்த ஊர் : திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி,தொழில்: கவிஞர், நாவலாசிரியர்கட்சிப் பதவி: செய்தி தொடர்புக்குழு
இணைச் செயலர்- எஸ்.ஆர்.சிவலிங்கம்
தந்தை: ராமசாமிபிறந்த தேதி: 10.6.1950கல்வி: எஸ்.எஸ்.எல்.சி.,மனைவி: நவரத்தினம் சொந்த ஊர்: உடையாப்பட்டி, சேலம்கட்சி பதவி: சேலம் கிழக்கு மாவட்ட செயலர்
பின்னணி என்ன?
ராஜ்யசபா தேர்தலில் ஆறு பேருக்கு மேல் போட்டியிட்டால், ஓட்டுப்பதிவு நடக்கும். நடந்தால், அ.தி.மு.க., இரண்டு இடங்களில் வெற்றி பெற, பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் ஆதரவு தேவை. பா.ஜ., அல்லது பா.ம.க., உறுப்பினர்கள் ஆதரவும் தேவைப்படும்.போட்டியை தவிர்க்க, தி.மு.க., மூன்று இடங்களிலும், கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் போட்டியிடும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து விட்டார். மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு, அ.தி.மு.க., வேட்பாளரை அறிவித்தால் போதும்; போட்டி இருக்காது. யார் ஆதரவையும் பெற வேண்டிய தேவை அக்கட்சிக்கு ஏற்படாது. முதல்வரின் முடிவு, பழனிசாமிக்கு சாதகமாக உள்ளதாக அவர் தரப்பினர் கூறுகின்றனர். போட்டியை தவிர்க்கவே, தி.மு.க., கூட்டணி நான்கு இடங்களுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது என, தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
போட்டி ஏற்பட்டால், அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணி ஏற்பட வாய்ப்பு உருவாகும். போட்டி இல்லை என்றால், அ.தி.மு.க., இரண்டு இடங்களை மட்டுமே பெற முயற்சிக்கும். இதனால், அ.தி.மு.க., மீது பா.ம.க., கடுப்பாகும். அதோடு, பா.ம.க.,வுக்கு 'சீட்' கொடுத்தால், தே.மு.தி.க.,வுக்கு கோபம் வரும். இதை எல்லாம் எதிர்பார்த்தே, நான்கு இடங்களில் மட்டும் போட்டி என்ற முடிவை ஸ்டாலின் எடுத்ததாக கூறப்படுகிறது. அ.தி.மு.க., என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.