ADDED : ஜன 02, 2024 01:06 AM

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நிறுவப்பட உள்ள கடவுள் ராமரின் சிலைகளை, கர்நாடகாவைச் சேர்ந்த கணேஷ் பட், அருண் யோகிராஜ் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்த சத்யநாராயண் பாண்டே என, மூன்று சிற்பிகள் செதுக்கிஉள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் வாசுதேயோ காமத், ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு வழங்கிய ஓவியம் அடிப்படையில் ராமர் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.
ஐந்து வயதுடைய குழந்தை தெய்வத்தின் முகபாவனைகள், உடல் அம்சங்கள், தெய்வீகத்தன்மை போன்றவற்றை சிறப்பாக சித்தரிக்கும் வகையில், சிற்பிகள் கணேஷ் பட், அருண் யோகிராஜ் மற்றும் சத்யநாராயண் பாண்டே வடிவமைத்தனர்.
இதில், மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய, 5 வயது குழந்தை ராமர் சிலையை கருவறையில் வைக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இறுதி முடிவு
கேதார்நாத்தில் நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் சிலை, புதுடில்லி கர்தவ்யா பாதையில் நிறுவப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் சிலை போன்றவற்றை அருண் யோகிராஜ் வடிவமைத்துஉள்ளார்.
ராமஜென்மபூமி நியாஸ் மற்றும் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் தான், கோவில் கட்டுமானப் பணிகளில் இறுதி முடிவுகளை எடுத்துள்ளார்.
வரும் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. எனினும், அதற்கு முந்தைய ஏழு நாட்களும் விரிவான சடங்குகள் நடத்தப்படும்.
சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவிற்கு தலைமை தாங்கிய, 17ம் நுாற்றாண்டில் புகழ் பெற்ற காசி அறிஞரான, காகா பட்டின் பரம்பரையைச் சேர்ந்த, வாரணாசியில் வசிக்கும், 86 வயதான வேத வித்வானான பண்டிட் லட்சுமிகாந்த் மதுராநாத் தீட்ஷித், கும்பாபிஷேகத்தில் பூசாரிகள் குழுவை வழிநடத்த உள்ளார்.
ஏழு நாட்கள்
ஜன., 16: கோவில் அறக்கட்டளை நியமித்த புரவலர் வாயிலாக சங்கல்பம், சரயு நதிக்கரையில் தசவித் குளியல், விஷ்ணு வழிபாடு நடக்கும்
ஜன., 17: அயோத்தியில் கடவுள் ராமரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலையுடன், ஷோபா யாத்திரை சுற்றுப்பயணம் நடக்கும். இந்த சிலை, கர்ப்பகிரகத்தில் நிறுவப்படும். மங்கள கலசத்தில் சரயு நீரைச் சுமந்து பக்தர்கள் கோவிலை அடைவர்
ஜன., 18: கணபதி பூஜை, அம்பிகா பூஜை, வருண பூஜை, மாத்ரிகா பூஜை, பிராமண வரன், வாஸ்து பூஜை போன்றவற்றுடன் முறையான சடங்குகள் துவங்கும்
ஜன., 19: தீப ஸ்தாபனம், நவக்கிரக ஸ்தாபனம் மற்றும் ஹோமம் நடக்கும்
ஜன., 20: கோவில் கருவறையை சரயு நதியின் புனித நீரால் கழுவிய பின், வாஸ்து சாந்தி செய்யப்படும்
ஜன., 21: 125 கலசங்களுடன் தெய்வீக ஸ்நானம் செய்த பின், ஷயதிவாஸ் செய்யப்படும்
ஜன., 22: காலை பூஜைக்கு பின், மதியம் மிருகசீருட நட்சத்திரத்தில், கடவுள் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.
ஜன., 16 -முதல் 22ம் தேதி வரையிலான, சிலை பிரதிஷ்டை சடங்குகளை நடத்த, காசியிலிருந்து 40க்கும் மேற்பட்டோர் உட்பட, நாடு முழுவதுமிருந்து, 121 வேத பண்டிதர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ௧௨௧ பேரில் ஒருவராக, சென்னையில் பிறந்த கே.வெங்கட்ரமண கனபாடிகள் இடம் பெற்றுஉள்ளார்.
வெற்றியும், நன்மையும் தரும்
நம் நாளிதழுக்கு, கே.வெங்கட் ரமண கனபாடிகள் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:
வரும் 22ம் தேதி, அபிஜித் முகூர்த்தத்தில் பிரதமர் நரேந்திர மோடியால், ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இது, ஜன., 22 மதியம் 12:00 மணி, 29 நிமிடங்கள், 8 வினாடிகளில் துவங்கும். இந்த நிகழ்வு, 12:00 மணி, 30 நிமிடங்கள், 32 வினாடிகள் வரை நீடிக்கும். அதாவது, 1 நிமிடம் 24 வினாடிகளுக்குள் சிலை பிரதிஷ்டை நடந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எனினும், ராமர் சிலை பிரதிஷ்டைக்கு முன், யாகம், ஹோமம், நான்கு விதமான வேதங்கள் ஓதுதல் மற்றும் பல்வேறு மொழிகளில் ராமாயண பாராயணம் உட்பட ஒரு மணி நேரம் சடங்குகள் நடத்தப்படும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, அபிஜித் முகூர்த்தத்தில் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றியும், நன்மையும் தரும்.
நிர்மோஹி அகாராவின் ஆச்சார்யா தரம் தாஸ் கூறுகையில், ''பிரதமர் மோடி ஆட்சியில் தான், தனக்கு கோவில் கட்டப்பட வேண்டும் என, கடவுள் ராமர் முடிவு செய்துள்ளார்.
''ராமர் கோவில் அமைவது, நம் அனைவருக்குமான தெய்வீகமான தருணம். ராம ராஜ்யத்தை நிறுவுவது, இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகம் முழுதும் அமைதி மற்றும் செழிப்புக்கான புதிய சகாப்தத்தை குறிக்கிறது,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -

