ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கட்டை, கற்களை வீசி பயங்கர மோதல் பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் முன்னிலையில் களேபரம்
ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கட்டை, கற்களை வீசி பயங்கர மோதல் பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் முன்னிலையில் களேபரம்
ADDED : நவ 05, 2025 01:52 AM

ஆத்துார்: சேலம் அருகே ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள், கற்கள், உருட்டுக்கட்டை, இரும்பு கம்பிகளுடன் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் தரப்பில் 8 பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், வடுகத்தம்பட்டியை சேர்ந்த பா.ம.க., - ராமதாஸ் அணி தெற்கு ஒன்றிய செயலர் சத்யராஜின் தந்தை தர்மராஜ், 72, நேற்று முன்தினம் இரவு, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
நேற்று காலை, 11:00 மணிக்கு, ராமதாஸ் ஆதரவாளரும், பா.ம.க., இணை பொதுச்செயலருமான சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் தலைமையில், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், 20க்கும் மேற்பட்ட கார்களில், வடுகத்தம்பட்டி சென்று தர்மராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, 11:30 மணிக்கு, வடுகத்தம்பட்டி - சின்னகிருஷ்ணாபுரம் சாலை வழியாக, அருள் உள்ளிட்ட நிர்வாகிகள், மத்துார் பிரிவு தரைப்பாலம் அருகே சென்றபோது, அன்புமணி ஆதரவாளரான சேலம் கிழக்கு மாவட்ட செயலர் ஜெயபிரகாஷ் தலைமையிலான, 20க்கும் மேற்பட்டோர் அருள் தரப்பினரின் கார்களை வழிமறித்தனர்.
எம்.எல்.ஏ., அருள், அவருடன் வந்த கார்களை நோக்கி உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி, கற்களை வீசி சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் தடுத்தும், கல்வீச்சு தொடர்ந்தது.
அருளை தாக்க வந்தபோது, மாவட்ட செயலர் நடராஜன் தடுத்தார். அவருக்கு காயம் ஏற்பட்டது. காரில் இருந்து அருள் இறங்க, அவரது ஆதரவாளர்கள், போலீசார் அனுமதிக்கவில்லை.
விவசாய தோட்டத்தில் இறங்கிய இரு தரப்பினரும், உருட்டு கட்டைகள், கற்களை வீசிக் கொண்டே இருந்தனர். அருள் ஆதரவாளர்கள், ஜெயபிரகாஷ் ஆதரவாளர்களை விரட்டிச்சென்றனர்.
இதில், அருள் வந்த 'பார்ச்சூனர்' கார், நடராஜனின், 'ஸ்கார்பியோ' கார், சேலம் மாநகர் மாவட்ட செயலர் ரத்தனம், வாழப்பாடி ஒன்றிய செயலர் பச்சமுத்து ஆகியோரின் 'இன்னோவா' கார்கள், ஒன்றிய செயலர் ஆனந்தின், 'சுசூகி ஸ்விப்ட்' கார் என, 8 கார்கள் தாக்குதலில் சேதமாகின.
காயமடைந்த நடராஜன், மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், ஒன்றிய செயலர் ஆனந்த், சேலம் நிர்வாகிகள் உட்பட 8 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அன்புமணி ஆதரவாளர்களில், வாழப்பாடி செந்தில்குமரன் காயமடைந்து, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
நடராஜன் கூறுகையில், ''எம்.எல்.ஏ., அருளை கொலை செய்யும் நோக்கில், அன்புமணி ஆதரவு மாவட்ட செயலர் ஜெயபிரகாஷ் தலைமையில், 20 பேர், 20 கார்களில் புடை சூழ வந்து தாக்குதல் நடத்தினர். உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி, கற்கள் வீசி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர்,'' என்றார்.

