எடுத்த முடிவில் ராமதாஸ் பிடிவாதம் குடும்பத்தினரின் சமரச முயற்சி தோல்வி
எடுத்த முடிவில் ராமதாஸ் பிடிவாதம் குடும்பத்தினரின் சமரச முயற்சி தோல்வி
ADDED : ஏப் 13, 2025 07:22 AM

சென்னை: பா.ம.க., தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய முடிவில், ராமதாஸ் பிடிவாதமாக இருப்பதால், அக்கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது.
கடந்த 10ம் தேதி, பா.ம.க., தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி, 'நானே தலைவர்' என, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். அவரது திடீர் அதிரடி, அக்கட்சிக்குள் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோபம்
எப்படியாவது ராமதாசை சமாதானப்படுத்தி, அன்புமணியை மீண்டும் தலைவராக அறிவிக்கச் செய்திட வேண்டும் என, ராமதாஸ் குடும்பத்தில் ஒரு தரப்பினரும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், கடந்த இரு நாட்களாக முயற்சி மேற்கொண்டனர்; அதில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எடுத்த முடிவில் ராமதாஸ் பிடிவாதமாக இருப்பதாக, அவரை சந்தித்தவர்கள் கூறுகின்றனர்.ராமதாசை சந்திக்கும் நிர்வாகிகள், 'கட்சியின் எதிர்காலம் அன்புமணிதானே. அவரை நீக்கியது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, அவரை மீண்டும் தலைவராக அறிவிக்க வேண்டும். கூட்டணி உள்ளிட்ட முக்கிய முடிவுகளை நீங்களே எடுக்கலாம்' என கூறியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த ராமதாஸ், இன்னும் சில நாட்களுக்கு தன்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் எனக் கூறி விட்டதாக, பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர். வரும் மே 11ம் தேதி, மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் ஒற்றுமை மாநாடு நடக்கவுள்ளது. மாநாட்டின் தலைவராக அறிவிக்கப்பட்ட அன்புமணி, அதன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனால், தலைவர் பதவி பறிக்கப்பட்டு, செயல் தலைவராக நியமிக்கப்பட்டதால், அவர் அமைதியாகி விட்டார்.
குழப்பம்
கடந்த 10ம் தேதியிலிருந்து, மாநாட்டு பணிகள் எதுவும் நடக்கவில்லை. அன்புமணியை தலைவர் என்று குறிப்பிடுவதா, செயல் தலைவர் என்று குறிப்பிடுவதா என்ற குழப்பத்தில், கட்சியின் மற்ற நிர்வாகிகளும் மாநாட்டு பணிகளில் ஈடுபடவில்லை.
நடப்பு அரசியல் நிகழ்வுகள், பிரச்னைகள் தொடர்பாக ராமதாசும், அன்புமணியும் தினமும் அறிக்கை வெளியிடுவர். 'பேஸ்புக், எக்ஸ்' தளத்தில் பதிவுகளை வெளியிடுவர். கடந்த மூன்று நாட்களாக, அவர்களிடம் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை.
இதனால், பல ஆண்டுகளுக்கு பின் அறிவிக்கப்பட்ட மாமல்லபுரம் மாநாடு எப்படி நடக்குமோ என்ற குழப்பம் பா.ம.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது.

