ADDED : ஜன 12, 2024 12:10 AM
சென்னை:கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள், ரேஷன் கடைகளில் ஆய்வுக்கு செல்லும் போது, உணவு பொருட்கள் இருப்பு குறைவாக இருந்தால், ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.
அதன்படி, தலா கிலோ அரிசிக்கு, 25 ரூபாய்; சர்க்கரைக்கு, 50 ரூபாய்; பாமாயிலுக்கு, 75 ரூபாய்; துவரம் பருப்புக்கு, 75 ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த தொகையை, ரேஷன் கடையை நடத்தும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் உடனடியாக வசூலிப்பது இல்லை.
இதுகுறித்து, ஊழியர்கள் கூறியதாவது:
கடையில் இருப்பு சரியாக இருந்தாலும், 'நான் வந்ததற்காக, 5 கிலோ அரிசி குறைவாக இருப்பதாக பதிவு செய்து கொள்கிறேன்' என்று அதிகாரிகள் கூறுகின்றனர்; அபராதத்தை மாதந்தோறும் வசூலிக்காமல், ஆறு மாதம், ஓராண்டு ஆன பின், மொத்த அபராத நிலுவை தொகையையும், ஒரே சமயத்தில் செலுத்துமாறு நெருக்கடி தருகின்றனர்; அவ்வளவு தொகை ஊழியர்களிடம் இல்லை.
எனவே, மாதந்தோறும் அபராத தொகையை வசூலிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.