சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டி: திருமாவளவன் உறுதி
சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டி: திருமாவளவன் உறுதி
ADDED : பிப் 28, 2024 12:12 AM
பெரம்பலுார்:''வரும் லோக்சபா தேர்தலில், மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
அரியலுாரில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், 10 கட்சிகள் உள்ளன. இதில், இரண்டு கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு ஏற்பட்டு விட்டது. தொகுதி உடன்பாடு குறித்து, எங்களுடன் நடந்த முதல் கட்ட பேச்சில் ஒரு பொதுத்தொகுதி, மூன்று தனி தொகுதிகள் கேட்டுள்ளோம்.
இருப்பினும், கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால், அவ்வளவு தொகுதிகளை பெற முடியாது என்ற நிதர்சனத்தையும், நாங்கள் உணர்ந்துள்ளோம்.
அடுத்த கட்ட பேச்சு இன்னும் ஓரிரு நாட்களில் நடக்கும் என, நம்புகிறோம். விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு விடும்.
பா.ஜ.,வை விட்டு அ.தி.மு.க., தனியாக பிரிந்து வந்தாலும், பா.ஜ.,- - அ.தி.மு.க.,வை விடுவதாக இல்லை. அ.தி.மு.க.,வை மூன்றாம் நிலைக்கு தள்ளுவதற்கான முயற்சியில், பா.ஜ., ஈடுபட்டுள்ளது. இதை ஏற்கனவே பலமுறை தெரிவித்துள்ளேன்.
என் சொந்த தொகுதியான சிதம்பரம் தொகுதியில் தான், நான் போட்டியிடுகிறேன். இதில், யாருக்கும் சந்தேகம் வேண்டாம். தென்மாநிலங்களில் வி.சி., அதிக அளவில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
குறிப்பாக, கர்நாடகா, ஆந்திராவில் தலா மூன்று தொகுதியிலும், கேரளாவில் இரண்டு தொகுதியிலும் போட்டியிட கட்சியினர் முன்வந்துள்ளனர்.
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியிலும், மற்ற மாநிலங்களில் 'இண்டியா' கூட்டணியிலும் போட்டியிட முயற்சித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

