போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் ஜன.,7ல் மீண்டும் பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் ஜன.,7ல் மீண்டும் பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர்
UPDATED : ஜன 05, 2024 05:52 PM
ADDED : ஜன 05, 2024 05:43 PM

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்த நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி செலவாகும் என்பதால் நிதித்துறையுடன் ஆலோசித்து மீண்டும் நாளை மறுநாள் (ஜன.,7) பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சிவசங்கர் தெரிவித்தார்.
தமிழக போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்தன. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தும் சமரசம் ஏற்படாததால், போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தை அறிவித்தனர்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. ஆனால், திட்டமிட்டபடி 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதனையடுத்து சென்னை பல்லவன் சாலையில் உள்ள பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
நிதித்துறையுடன் ஆலோசனை
சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்த நிலையில், பொங்கல் நேரத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நிதி கூடுதலாக செலவாகும் சில விஷயங்களை நிதித்துறையுடன் கலந்தாலோசித்து முடிவு எட்டிய பிறகுதான் அறிவிக்க முடியும் என்பதால், நாளை மறுநாள் (ஜன.,7) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். என்ன பிரச்னை என்பதை இங்கு விவாதித்தால், பெரிய விவாதமாக மாறிவிடும். எல்லோருக்கும் கோரிக்கை இருக்கும்; அனைத்தையும் ஒரே நாளில் எட்ட முடியாது, பேசி தான் முடிவெடுக்க முடியும். எனவே நிதித்துறையுடன் பேசிய பிறகு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வேலைநிறுத்த முடிவு தொடரும்
பின்னர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பேச்சுவார்த்தை மூலமாக நல்ல முடிவை எட்ட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். எங்களின் 6 கோரிக்கைகளையும் விளக்கி கூறினோம். அரசுக்கு தேவையான அவகாசம் வழங்க தயாராக இருக்கிறோம். நிதித்துறை என்றெல்லாம் காரணம் சொன்னார், அதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினோம். அப்படியானால் ஒரு நாள் அவகாசம் கோரினார். அதன்படி, நாளை மறுநாள் அமைச்சரின் பதிலுக்கு காத்திருக்கிறோம். அதுவரை வேலைநிறுத்த முடிவு தொடரும். அரசு இதனை முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.