'ராமதாஸ் எழுதிய கழகத்தின் கதை புத்தகத்தை படியுங்கள் அன்புமணி!'
'ராமதாஸ் எழுதிய கழகத்தின் கதை புத்தகத்தை படியுங்கள் அன்புமணி!'
ADDED : ஜன 29, 2025 01:20 AM

சென்னை:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுதிய, 'கழகத்தின் கதை' புத்தகத்தை அன்புமணி படித்து பார்க்கும்படி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
இட ஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான, 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, தைலாபுரத்தில் தலைவலியை ஏற்படுத்தியது போல பா.ம.க., தலைவர் அன்புமணி புலம்பி தள்ளியிருக்கிறார்.
'வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தது முதல்வர் ஸ்டாலின் தான்' என, சொல்லி இருக்கிறார்.
கடந்த, 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அளித்த வாக்குறுதியை, முதல்வர் நிறைவேற்றி இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எல்லாம், தமிழக அரசியலில் இதுவரை நடக்காத நிகழ்வு.
இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு, முதல்வர் ஸ்டாலின் மணிமண்டம் கட்டியுள்ளார். இதற்காக, அ.தி.மு.க., என்ன செய்தது என்பது அன்புமணிக்கே வெளிச்சம்.
கட்சி தலைவர்கள் மாறலாம்; முதல்வர்கள் மாறலாம். ஆனால், சமூக நீதியை துாக்கி பிடிக்கும் தி.மு.க., கொள்கைகள் மாறவில்லை.
அது மேலும் மெருகூட்டப்பட்டு கொண்டே தான் இருக்கும் என்பதற்கு சாட்சிதான் இன்றைய விழா. தந்தை ராமதாசுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணிக்கு, வன்னியர்களுக்கு தி.மு.க., என்ன செய்தது என்பதெல்லாம் தெரியப்போவது இல்லை.
அதற்காக வரலாற்றை யாரும் மாற்றி எழுதி விட முடியாது. ராமதாஸ் எழுதிய அ.தி.மு.க., வரலாறு குறித்த, 'கழகத்தின் கதை' என்ற புத்தகத்தை கொஞ்சம் அன்புமணி புரட்டிப் பார்க்க வேண்டும். அந்த கதையை படித்து விட்டு, அன்புமணி, பா.ம.க., குழப்பத்தின் கதையை எழுதலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

