விசாரணை அதிகாரி இல்லாததால் ரியல் எஸ்டேட் வழக்குகள் முடக்கம்
விசாரணை அதிகாரி இல்லாததால் ரியல் எஸ்டேட் வழக்குகள் முடக்கம்
ADDED : பிப் 02, 2024 10:03 PM
சென்னை:மாவட்ட நீதிபதி நிலையில் விசாரணை அதிகாரி இல்லாததால், ரியல் எஸ்டேட் ஆணையத்தில், இழப்பீடு கோரும் வழக்குகள் முடங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவதில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, ரியல் எஸ்டேட் ஆணையம், 2017ல் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன், வீடு ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படும் வழக்குகளை விசாரிக்க, ஒரு நபர் அமர்வும் செயல்படுகிறது.
இது தவிர, இழப்பீடு கோரும் வழக்குகளுக்கு விசாரணை அதிகாரிஇருப்பார். இந்த பதவிக்கு, மாவட்ட நீதிபதி நியமிக்கப்படுகிறார். விசாரணை அதிகாரியாக இருந்தசரவணன், 2023 ஜூனில் ஓய்வு பெற்றார்.
அதன்பின், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரை தேர்வு செய்யும் பணி துவங்கியது. 2023 மே மாதமே அதற்கான கோப்புகள் அனுப்பப்பட்ட நிலையில், வீட்டுவசதி துறை அதிகாரிகள் அலட்சியத்தால், விசாரணை அதிகாரி நியமனம் தாமதமாகி வருகிறது.
இது குறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மணிசங்கர் கூறியதாவது:
தமிழக அரசின்சமீபத்திய அணுகுமுறை, இந்த ஆணையத்தைகேள்விக்குறி ஆக்குவதாக உள்ளது.
ஆணையத்தில் விசாரணை அதிகாரி இல்லாததால், வீடு வாங்குவதில் பிரச்னை ஏற்பட்டு, இழப்பீடு கோரியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதில், வழக்குகள் நிலுவையில் இருப்பது, ரியல் எஸ்டேட் தொழிலையும், மக்களையும் பாதிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

