ADDED : மார் 07, 2024 12:03 AM
சென்னை:தமிழகத்தில், 6,600 கி.மீ., துாரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இச்சாலைகளில் கட்டணம் வசூலிக்க, 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இதே நடைமுறையை பின்பற்றி, பல மாநில நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்து, கட்டண சாலைகளாக பராமரிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இத்திட்டப்படி, சாலை கட்டமைப்பு மற்றும் உருவாக்க பணி, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் சட்ட மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, மாநில நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட அதிகாரிகள் குழுவை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பதவியை பிடிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலரும் காய் நகர்த்தி வருகின்றனர்.

