ADDED : மார் 04, 2024 11:25 PM
ஆண்டிபட்டி : நீர் திறப்பால் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைகிறது. முறைப்பாசன அடிப்படையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 2000 கன அடியில் இருந்து நேற்று 1800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கும். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் ஜன., 6 ல் முழு அளவான 71 அடியாக உயர்ந்து நிரம்பியது. அணைக்கு வந்த நீர் முழுவதும் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது. தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்ட நீர் ஜன., 23ல் நிறுத்தப்பட்டது. அப்போது வரை அணை நீர்மட்டம் 71 அடியாக தொடர்ந்தது.
இந்நிலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக திறந்து விடப்பட்ட நீர் முறைப்பாசன அடிப்படையில் இன்றளவும் தொடர்கிறது. சில வாரங்களாக அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீர் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் முழு அளவில் இருந்த அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து நேற்று காலை 11:00 மணிக்கு 67:00 அடியானது.
அப்போது பாசனத்திற்கு வெளியேறிய நீரின் அளவு வினாடிக்கு 2000 கனஅடியில் இருந்து 1800 கன அடியாக குறைக்கப்பட்டது. நீர்வரத்து வினாடிக்கு 458 கன அடியாக இருந்தது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி வழக்கம்போல் வெளியேறுகிறது.
கோடை வெயிலின் தாக்கம் துவங்கியுள்ளதால் பரந்து விரிந்த வைகை அணை நீர்த்தேக்கத்தில் ஆவியாகும் நீரின் அளவு அதிகமாகும். இதனால் அணை நீர்மட்டம் வரும் காலங்களில் வேகமாக குறையும் என்று நீர்ப்பாசனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

