ரியல் எஸ்டேட் ஆணையத்தில் திட்டங்கள் பதிவு தாமதம்; கட்டுமான துறையினர் புகார்
ரியல் எஸ்டேட் ஆணையத்தில் திட்டங்கள் பதிவு தாமதம்; கட்டுமான துறையினர் புகார்
ADDED : டிச 10, 2024 02:16 AM
சென்னை: ரியல் எஸ்டேட் ஆணையத்தில், புதிய கட்டுமான திட்டங்களை பதிவு செய்யும் பணிகள் தாமதம் செய்யப்படுவதாக, கட்டுமான துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, 5,381 சதுர அடி, அதற்கு மேற்பட்ட பரப்பளவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை பதிவு செய்வது கட்டாயம். கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவோர், சம்பந்தப்பட்ட துறைகளில் திட்ட அனுமதி பெற்றவுடன், அந்த விபரங்களை தெரிவித்து, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., மற்றும் நகரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,யில் புதிதாக வழங்கப்படும் திட்ட அனுமதி விபரங்கள், ரியல் எஸ்டேட் ஆணையத்துடன் பகிரப்படுகின்றன. இதனால், இங்கு பதிவு செய்யாமல் வீடு, மனை விற்பவர்கள் மீது, அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்த ஆணையத்தில் புதிய திட்டங்கள் பதிவு, 'மேனுவல்' முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அது தற்போது, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும், புதிய திட்டங்கள் பதிவில் தாமதம் ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழக வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக, ரியல் எஸ்டேட் ஆணையத்தில், புதிய திட்டங்களை பதிவு செய்யும் பணிகள் தாமதமாகின்றன. ஏற்கனவே, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., சரிபார்ப்பு முடித்த ஆவணங்கள் அடிப்படையில் பதிவு மேற்கொள்வதற்கு, இரண்டு மாதம் வரை தாமதம் செய்கின்றனர்.
கீழ்நிலை அதிகாரிகள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, ஒரே முறையில் தெரிவிக்காமல், ஒவ்வொன்றாக கேட்டு அலையவிடுகின்றனர். இப்பணிகளை விரைவாக முடிக்க, ஆணைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
30 நாட்களில் முடிந்து விடும்
தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய கூடுதல் இயக்குநர் எஸ்.செல்வகுமார் கூறியதாவது:
புதிய திட்டங்கள் பதிவு பணிகள், கடந்த மார்ச் முதல் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதில், கட்டுமான திட்டம் தொடர்பான அனைத்து விபரங்களும் சரியாக இருந்தால், உடனடியாக பதிவு பணிகள் முடியும்.
விண்ணப்பத்தில் கேட்டுள்ள அனைத்து ஆவணங்கள், விபரங்கள் சரியாக இருந்தால், 30 நாட்களுக்குள் பதிவு முடிந்து விடும். இதில், தாமதம் செய்வதற்கு அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

