அரசு சிறப்பு திட்டங்களுக்கான நிலம் மொத்தமாக பெற புதிய சட்டம் வருவாய் துறை விதிகள் வெளியீடு
அரசு சிறப்பு திட்டங்களுக்கான நிலம் மொத்தமாக பெற புதிய சட்டம் வருவாய் துறை விதிகள் வெளியீடு
ADDED : அக் 29, 2024 09:35 PM
சென்னை:அதிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு திட்டங்களை செயல்படுத்த தேவையான நிலங்களை, ஒருங்கிணைப்பு முறையில் பெறும் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை, வருவாய் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்தப் படும் திட்டங்களுக்கு, பல்வேறு மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப் படுகிறது. இதில், பழைய வழிமுறைகளுக்கு தீர்வாக, 2013ல் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தின்படி, அரசு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் போது, இழப்பீடு, மறுவாழ்வு, மறுகுடியமர்வு திட்டங்கள் செயல்படுத்த, அதிக செலவு ஏற்படுகிறது. இதனால், திட்டங்களின் மதிப்பீட்டை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதற்கு தீர்வாக, சிறப்பு திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டம், 2023ல் நிறைவேற்றப்பட்டது. அனைத்து நிலை ஒப்புதலும் கிடைத்த போதிலும், விதிகள் வகுப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதன்படி, மாநிலத்தின் ஒட்டுமொத்த நலனுக்கான திட்டங்கள், சிறப்பு திட்டங்கள் என அங்கீகரிக்கப்படும்.
இதற்கு தேவைப்படும் நிலங்களை, நேரடியாக உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தாமல், ஒருங்கிணைப்பு முறையில் பெற வழிவகை செய்யப்படுகிறது.
இதனால், ஒரு குறிப்பிட்ட பகுதியில், பல்வேறு நபர்களிடம் துண்டு துண்டாக நிலம் எடுக்காமல், அனைத்து உரிமையாளர்களிடமும் பேசி, சிறிய அளவில் நிலம் உள்ளவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து, திட்டத்துக்கு தேவையான நிலத்தை மொத்தமாக பெறுவதே, இதன் அடிப்படை.
காலி நிலங்களை உரிமையாளர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதால், வளர்ச்சி திட்டத்துக்கு தேவைப்படும் நிலத்தை மொத்தமாக கையகப்படுத்த முடியும். இதற்கான நடைமுறை விதிகளை, வருவாய் துறை வகுத்துள்ளது.
இந்நிலையில், சிறப்பு திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டம், அக்., 18ல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான விதிகள் அடங்கிய அரசாணையை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அமுதா பிறப்பித்துள்ளார்.
என்னென்ன?
↓ஒரு திட்டம், எதன் அடிப்படையில் சிறப்பு திட்டமாக கருதப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரங்களுடன், சம்பந்தப்பட்ட துறையினர் அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும்
↓நீரியல் திட்டம், நில உரிமை திட்டம், நில பயன்பாட்டு திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், சிறப்பு திட்டங்களின் தகுதி ஆராயப்படும்
↓நீர்நிலை, நீர் வழித்திட்டம், நீர்ப்பாசன அமைப்பு போன்றவற்றை பாதிக்கவில்லை என்பதை, சம்பந்தப்பட்ட துறை உறுதிப்படுத்த வேண்டும்
↓சம்பந்தப்பட்ட துறை அளிக்கும் விபரங்கள் திருப்தி அளிக்கும் நிலையில், அத்திட்டத்தை சிறப்பு திட்டமாக அரசு அங்கீகரிக்கும்
↓இத்திட்டத்துக்கு தேவையான நிலம் தொடர்பான விபரங்களையும், அதை பெறுவதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து முடிவு செய்ய, கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் அடங்கிய வல்லுனர் குழு அமைக்கப்படும்
↓சிறப்பு திட்டத்தை தயாரித்த நிறுவன அதிகாரி, வல்லுனர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்
↓இக்குழுவினர் நில ஒருங்கிணைப்பு வரைவு திட்டத்தை இறுதி செய்வர். இதன் அடிப்படையில் சிறப்பு திட்டம் குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்படும்
↓இதில் யாருக்காவது ஆட்சேபனை இருந்தால், அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்
↓நீர் நிலைகளுக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதியாகும் நிலையில், வல்லுனர் குழு பரிந்துரை அடிப்படையில் இறுதி ஆணை வெளியிடப்படும்.

