ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கு நிதி ஒதுக்க கோரிக்கை
ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கு நிதி ஒதுக்க கோரிக்கை
ADDED : ஆக 12, 2025 03:13 AM
'ராமேஸ்வரம் மற்றும் இலங்கையில் உள்ள தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை மீண்டும் துவங்குவதற்கு, 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ், 118 கோடி ரூபாய் வரை நிதி உதவி வழங்க வேண்டும்' என, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
டில்லியில் நேற்று கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவாலை, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு சந்தித்துப் பேசினார். அப்போது அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ராமேஸ்வரம் மிக முக்கியமான புனித யாத்திரை தலமாக விளங்கி வருவதால், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் என்ற வகையில் இரண்டு கோடி பேர் வருகை தருகின்றனர். இங்குள்ள துறைமுகத்தில் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்தினால், அங்கு உள்நாட்டு சுற்றுலா மேம்படும். அதோடு, சர்வதேச படகு சேவையையும் ஊக்குவிக்கும்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில், 118 கோடி ரூபாய் திட்ட செலவில், 250 மீட்டர் நீளமுள்ள அணுகு தோணித்துறை, சர்வதேச பயணியர் முனையம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை, சென்னை ஐ.ஐ.டி., யில் உள்ள துறைமுகங்கள், நீர்வழி மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் தயாரித்து அளித்துள்ளது.
இதன் மூலம் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கையிலுள்ள தலைமன்னார் வரையிலான, 48 கி.மீ., துாரத்திற்கு சர்வதேச பயணியர் கப்பல் போக்குவரத்தை துவங்க வேண்டும்.
தோணித்துறை மற்றும் பயணியர் முனையம், ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து, 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது, நாட்டின் பிற மாநிலங்களைச் சேர்ந்த மற்றும் வெளிநாட்டு பயணியர் என அனைவரும், இலங்கையின் தலைமன்னார் வரை பயணிக்க உதவும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- நமது டில்லி நிருபர் - .