மக்காச்சோளத்தட்டையை மடக்கி உழவு செய்யுங்கள் ஆராய்ச்சி மைய தலைவர் அறிவுறுத்தல்
மக்காச்சோளத்தட்டையை மடக்கி உழவு செய்யுங்கள் ஆராய்ச்சி மைய தலைவர் அறிவுறுத்தல்
ADDED : டிச 08, 2024 03:07 AM

கோவை:'சொந்த பயன்பாட்டுக்கு அல்லாமல், மக்காச்சோளத்தட்டை தீவனத்துக்காக விற்பனை செய்வதை விட, மடக்கி உழவு செய்தால், மண்வளம் பாதுகாக்கப்படும்; உரச்செலவு குறைந்து வருவாய் அதிகரிக்கும்' என, மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய தலைவர் தெரிவித்தார்.
கோவை வேளாண் பல்கலையின் கீழ், திண்டுக்கல் மாவட்டம் பழநி தாலுகா வாகரையில் மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.
மக்காச்சோளம் குறித்த ஆராய்ச்சி மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி, விதை உற்பத்தி என மக்காச்சோள சாகுபடி மேம்பாடு சார்ந்து இம்மையம் செயல்படுகிறது.
மக்காச்சோள ஆராய்ச்சி மையத்தின் தலைவர் செல்வகுமார், தாவரக் கழிவை மண்வளத்துக்காக பயன்படுத்துவது குறித்து கூறியதாவது:
எந்த பயிராக இருந்தாலும் மண் பரிசோதனை செய்து, அதற்கேற்ப உரம் இட வேண்டும்.
பொதுவாக விவசாயிகள், மக்காச்சோள பயிர்களுக்கு போதிய உரம் இடுவதில்லை. மழை நன்றாக பெய்தாலே, பயிர்கள் செழிப்பாக வளர்ந்து விடும்.
இதனாலேயே பெரும்பாலும் உரம் இடுவதில்லை. குறிப்பாக பொட்டாஷ் இட்டால் தான், மக்காச்சோளத்தில் விதை பிடிக்கும் திறன் நன்றாக இருக்கும். சில விவசாயிகள், 'செடி நன்றாக இருக்கிறது. ஆனால் மணி பிடிக்கவில்லை' என்பர். அவர்கள், பொட்டாஷ் பயன்படுத்தி இருக்க மாட்டார்கள்.
விலை நன்றாக கிடைப்பதால், சில விவசாயிகள் தொடர்ந்து மக்காச்சோளத்தைப் பயிரிடுவர். முதல் சில ஆண்டுகள் இதனால் எந்த பாதிப்பும் இருக்காது. மக்காச்சோள வேர்கள், சத்துகளை தானாக உறிஞ்சி எடுத்துக் கொள்ளும்.
மண்ணில், சத்து தீர்ந்து விட்டால் தான், 'எங்கள் பயிர் வெள்ளையாக அல்லது மஞ்சளாக இருக்கிறது. வெளுத்துப் போய்விட்டது. மகசூல் குறைகிறது' என்ற பிரச்னையோடு வருவர்.
போதிய நுண்ணுாட்டச்சத்து கொடுக்காததால் தான் இப்பிரச்னைகள் எழுகின்றன. எனவே, மண் பரிசோதனை செய்து, அதற்கேற்ப உரமிட வேண்டும்.
மடக்கி உழணும்
முந்தைய காலங்களில் மக்காச்சோள தட்டை, மாடுகளுக்கு தீவனமாக அதிகம் பயன்படுத்தாமல் இருந்தனர். தற்போது, இதையும் தீவனமாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. சில விவசாயிகள் பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனம் உற்பத்திக்காக 80வது நாளில் தட்டோடு முழுமையாக வெட்டி எடுத்து விடுகின்றனர்.
இதனால், மண்ணின் வளம் பாதிப்படைகிறது. அதாவது போதிய உரம் கொடுக்காத நிலையில், அனைத்துத் தாவரக் கழிவுகளையும் வெளியே எடுத்துவிட்டால், மண்ணின் வளம் குறையத்தானே செய்யும். தொழு உரம், கோழி எரு உள்ளிட்ட இயற்கை உரம் கொடுக்காத நிலங்களில் இப்பிரச்னை வரும்.
அந்த மாதிரி நிலங்களில், எங்களின் பரிந்துரை என்னவெனில், சொந்தமாக மாடுகள் இருந்தால் மட்டும் தட்டை எடுத்துப் பயன்படுத்துங்கள். மாடு, தீவனமாக உட்கொண்டால், மாட்டின் சாணம் மீண்டும் எருவாக நிலத்துக்கேதான் வரும்.
சொந்தமாக கால்நடைகள் இல்லாவிட்டால், அந்தத் தட்டை வெளியே விற்பனைக்குக் கொடுக்காமல், மடக்கி உழவு செய்து விட வேண்டும்.
ஏக்கருக்கு 3 டன் மக்காச்சோளம் விளைவதாகக் கொண்டால் ஏறக்குறைய 3 டன் வரை தட்டு கிடைக்கும். அந்தத் தட்டை விற்பனை செய்துவிட்டால், அதே அளவு 3 டன் குப்பை உரத்துக்கு காசு கொடுத்துத்தானே வாங்க வேண்டியிருக்கும்.
ஒப்பீட்டளவில் தட்டின் விலையை விட, குப்பை எருவின் விலை அதிகம். அதற்குப் பதில், தட்டை மடக்கி உழவு செய்தால், மண்ணின் வளம் கூடும்.
தட்டு மக்குவதில்லை என்ற பிரச்னைக்கும் தொழில்நுட்ப தீர்வு உள்ளது. கோவை வேளாண் பல்கலையின், சுற்றுச்சூழல் அறிவியல் துறை, தட்டை வேகமாக மக்கச் செய்யும் ஊக்கியைக் கண்டறிந்துள்ளது.
டிஸ்க் அல்லது ரொட்டாவெட்டரைப் பயன்படுத்தி, அறுவடைக்குப் பிந்தைய மக்காச்சோளத் தட்டை மடக்கி உழவு செய்து, மக்கச்செய்யும் ஊக்கியை போட்டுவிட்டால், விரைவில் மக்கி விடும். அடுத்து விரைவிலேயே பயிர்செய்ய முடியும்.
மக்காச்சோளத்தட்டை, மாட்டுத் தீவனத்துக்காக விற்பனை செய்தால், அந்த அளவுக்கு வருவாய் கிடைக்காது.
மடக்கி உழுவதால் உரச்செலவை மிச்சப்படுத்த முடியும். மண் வளத்தையும் பாதுகாக்கலாம். இதனை விவசாயிகள் புரிந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.