'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கு எதிராக தீர்மானம்
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கு எதிராக தீர்மானம்
UPDATED : பிப் 16, 2024 02:32 AM
ADDED : பிப் 14, 2024 11:54 PM

சென்னை :'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதிகள் மறுசீரமைப்பு திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி, மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரு தீர்மானங்களையும் முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நாட்டையும், நாட்டு மக்களையும் அச்சத்திலும் பதற்றத்திலும் வைக்கும், இரண்டு மிக முக்கியமான பிரச்னைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றியாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஒன்று, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்கிற மிக மோசமான எதேச்சதிகார எண்ணம். இதை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.
அரசியல் சட்ட விரோதம்
இரண்டாவது, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால், தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் சதி.
இரண்டுமே மக்களாட்சியை குறைக்கும் செயல்கள். இவற்றுக்கு எதிராக அனைவரும் ஒருசேர குரல் கொடுத்தாக வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல், முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமற்றது; அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது.
சட்டசபைகளை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும், அப்படி கலைப்பது அரசியல் சட்ட விரோதம் என்பதாலும், இந்த நடைமுறையை நாம் எதிர்க்க வேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைத்து, மத்தியில் அமையும் ஆட்சி கவிழுமானால், அனைத்து மாநிலங்களையும் கலைத்து விட்டு, தேர்தல் நடத்துவரா? சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்து, தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தானாக முன்வந்து பதவி விலகுவரா?
லோக்சபா, சட்டசபைக்கு மட்டுமல்ல; உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா? லோக்சபா தேர்தலையே, ஒரே நாளில் இந்தியா முழுக்க நடத்த இயலாத சூழல் தான் உள்ளது.
இந்நிலையில், லோக்சபா தொகுதிகளுக்கும், மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்துவது மாயாஜாலமா?
மறுவரையறை
தொகுதி மறுவரையறை திட்டத்தில், தென் மாநில மக்களை, குறிப்பாக தமிழக மக்களின் பார்லிமென்ட் பிரதிநிதித்துவத்தை குறைக்கக்கூடிய ஆபத்து, சூழ்ச்சி இருக்கிறது.
இந்திய அரசியலமைப்பின் 82 மற்றும் 170ம் பிரிவுகளின்படி, ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பின்னும், பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் புதிய இடங்கள் உருவாக்கப்படுகின்றன.
ஏற்கனவே உள்ள தொகுதிகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்படுகின்றன. கடந்த 1976 வரை, ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகும், லோக்சபா, ராஜ்யசபா, சட்டசபை இடங்கள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு வந்தன.
இவ்வாறு செய்யும்போது, மக்கள்தொகை அடிப்படையில், பார்லிமென்ட், சட்டசபை இடங்கள் குறைக்கப்படுகின்றன.
மக்கள்தொகை கட்டுப்பாடு கொள்கையை தீவிரமாகச் செயல்படுத்தி, மக்கள் தொகையை குறைத்துக் கொள்ளும் மாநிலங்களுக்கு தரப்படும் தண்டனையாக இது அமைந்துள்ளது.
மக்கள்தொகை கட்டுப்பாட்டில் ஆர்வம் செலுத்தாத மாநிலங்களுக்கு பரிசாக அவற்றுக்கான பிரதிநிதித்துவம் அதிகமாகும். மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்தால், தமிழகம் பெரும் பின்னடைவை சந்திக்கும்.
தற்போது, 39 எம்.பி.,க்கள் இருக்கும்போதே, மத்திய அரசிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். இதிலும் குறைந்தால், தமிழகம் கோரிக்கை வைக்கும் பலத்தை இழக்கும்; உரிமைகளை இழக்கும். இதனால், தமிழகம் பின்தங்கி விடும்.
குரல் ஓட்டெடுப்பு
இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் இணைந்த நாடு. எந்த மாநிலமும் பிற மாநிலத்தை விட உயர்ந்ததோ, முக்கியமானதோ அல்ல; அனைத்தையும் சமமாக நடத்த வேண்டும்.
இந்தியாவின் ஒற்றுமையை இதுநாள் வரை கட்டிக்காத்து வரும் கூட்டாட்சி தத்துவத்தை மீறும் செயல் எதையும், மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது.
வரும் 2026ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட உள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
அதையடுத்து, விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். பின், இரண்டு தீர்மானங்களும் குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டன.

