ADDED : நவ 21, 2025 04:22 AM

சென்னை: உதவியாளராக பணிபுரிய வந்த பெண்ணுக்கு, பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, ஓய்வு பெற்ற மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மடிப்பாக்கம், மகளிர் காப்பகத்தில் வசிக்கும் 43 வயது பெண்; தனியார் மாத இதழில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார். இவர், டி.பி.,சத்திரம் போலீசில் கடந்த செப்., 13ம் தேதி அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
அமைந்தகரையை அடுத்த ஷெனாய் நகர், புல்லா அவென்யூவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சுப்புராஜ், 75; ஓய்வுபெற்ற மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி. இவருக்கு தெரிந்த வழக்கறிஞர் வாயிலாக, செப்., 8ம் தேதி, அவரது வீட்டிற்கே சென்று, உதவியாளராக பணியில் சேர்ந்தேன்.
அன்றைய நாளில், இருவரும் பணி ரீதியாக காரில் வெளியில் சென்று, இரவு வீட்டிற்கு வர தாமதமானது. இதனால், எனக்கு ஆடைகளை வாங்கி கொடுத்த அவர், அவரது வீட்டிலேயே தங்கும்படி கூறினார்.
இருவரும் உணவு அருந்திய பின், படுக்கை அறையை சுத்தம் செய்யும்போது, சுப்புராஜ் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
போலீசார் வி சாரித்து, சுப்புராஜ் மீது, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் நேற்று முன்தினம் வழக்கு பதிந்தனர். பாலியல் புகாரில் ஓய்வு பெற்ற நீதிபதி மீது வழக்கு பதிந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே பெ ண், சில மாதங்களுக்கு முன், அவரது மகன் தற்கொலை வழக்கு தொடர்பாக, கோயம்பேடு துணை கமிஷனர் மீது புகார் அளித்திருந்தார்.

