'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வாயிலாக வசூல் வேட்டை வளம் கொழிக்கும் வருவாய் துறை, மின்வாரிய அதிகாரிகள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வாயிலாக வசூல் வேட்டை வளம் கொழிக்கும் வருவாய் துறை, மின்வாரிய அதிகாரிகள்
UPDATED : செப் 06, 2025 01:49 AM
ADDED : செப் 06, 2025 01:04 AM

சென்னை:'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை பயன்படுத்தி, வருவாய் துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள், வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
அரசு சேவைகளை, பொதுமக்களின் இருப்பிடம் அருகேயே வழங்க, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்தப்படுகிறது. கடந்த ஜூலை, 15ல், முதல்வர் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்தார்.
46 சேவைகள் அக்டோபர் மாதம் வரை, 10 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகரப் பகுதிகளில் நடத்தப்படும் முகாம்களில், 13 துறைகளின், 43 சேவைகள்; ஊரகப்பகுதிகளில் நடக்கும் முகாம்களில், 15 துறைகளின், 46 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் ஒரே இடத்தில் பெறப் படுகின்றன.
ஜாதி சான்று, பட்டா பெயர் மாற்றம், புதிய பட்டா, பென்ஷன், மகளிர் உரிமை தொகை, மருத்துவ காப்பீடு அட்டை கேட்டு விண்ணப்பம், ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டையில் திருத்தம் கேட்டு மக்கள் மனு அளித்து வருகின்றனர்.
புதிய மின் இணைப்பு, கூடுதல் மின்பளு விண்ணப்பம், மின்இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.
பட்டா கேட்டும், பட்டா பெயர் மாற்றம் கோரியும், அதிக அளவில் மனுக்கள் வருகின்றன. இவ்வாறு மனு அளித்தவர்களிடம், நிலத்தின் சந்தை மதிப்புக்கு தகுந்தபடி, வருவாய் துறையினர் மறைமுக வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலையாரி முதல் தாசில்தார் வரை லஞ்சப் பணம் கைமாறுகிறது. ஆயிரத்தில் துவங்கி லட்சங்களில் லஞ்சம் பெறப்படுகிறது.
மதிப்புக்கேற்ற லஞ்சம் இதேபோல, சொந்த இடங்களுக்கு மட்டுமின்றி, சர்ச்சைக்குரிய இடங்களுக்கும், நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்கும், நிலத்திற்கும் மின் இணைப்பு கேட்டு, பலர் முகாமில் மனு கொடுத்துள்ளனர்.
அவர்களிடம் மின் வாரிய ஊழியர்கள் பணம் பெற்றுக் கொண்டு, பணிகளை முடித்து கொடுக்கின்றனர். இவ்வாறு, உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாயிலாக, வருவாய் மற்றும் மின்வாரியத்தினர் வசூல் வேட்டை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ''உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும், பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களுக்கு, நிலத்தின் மதிப்புக்கேற்ப அலுவலர்கள் லஞ்சம் கேட்கின்றனர்.
''அரசு அலுவலகங்களில் காலியிடங்கள் அதிகம் உள்ள நிலையில், முகாமால் அலுவலக பணிகள் முடங்கி உள்ளன. திட்டத்தில் பயனடைந்தவர்கள் விபரத்தை, கிராமங்கள் தோறும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்,'' என்றார்.