ADDED : செப் 04, 2025 01:55 AM
சென்னை,:தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், தமிழகம் முழுதும் வருவாய் துறை உதவியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, சங்க தலைவர் எம்.பி. முருகையன், முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வருவாய் துறை அலுவலர்களின் வாழ்வாதாரத்துக்கான ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் 48 மணி நேரம் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.
இதில், தமிழகம் முழுதும், 10,920 பேர் பங்கேற்றுள்ளனர். தற்போது நடந்து வரும், 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்' வருவாய் துறை அலுவலர்களுக்கு, வேலைப் பளு மற்றும் பணி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன.
முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண, 45 நாட்கள் அவகாசம் இருந்தும், 20 நாட்களில் நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கின்றனர். இதனால், பணியின் தரம் பாதிக்கப்படும்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண, 75 நாட்கள் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். எங்களை கடும் நெருக்கடி, மன அழுத்தத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.