ADDED : டிச 15, 2024 10:12 AM

பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியாறு அணை, பி.ஏ.பி., பாசனத்தில், முக்கிய அணையாகும். கடந்த, 26ம் தேதி மொத்தம் உள்ள, 120 அடியில், 118.65 அடியாக அணை நீர் மட்டம் உயர்ந்தது. அதன்பின், பாசனத்துக்கும், கேரளாவுக்கு ஒப்பந்தப்படியும் நீர் வழங்குவதால், ஆழியாறு நீர்மட்டம் குறைந்தது. கடந்த, இரு நாட்களாக மலைப்பகுதி மற்றும் மேல்ஆழியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், ஆழியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.
நேற்றுமுன்தினம் அணைக்கு, வினாடிக்கு, 3,600 கனஅடி நீர் வரத்து இருந்தது. நேற்றும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அணை நீர்மட்டம் ஒரே நாளில் நான்கு அடி உயர்ந்து, 116.15 அடியாக இருந்தது. வினாடிக்கு, 2,891 கனஅடி நீர் வரத்து இருந்தது.
இதையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள், வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால், முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என்பதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகம் உள்ளதால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.