கால மாற்றத்திற்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம்: அமைச்சர் வேலு உறுதி
கால மாற்றத்திற்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம்: அமைச்சர் வேலு உறுதி
ADDED : ஏப் 16, 2025 12:13 AM
சென்னை:''கால மாற்றத்திற்கு ஏற்பவும், அரசின் நிதி நிலைமைக்கு ஏற்பவும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்,'' என, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கூறினார்.
சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:
பா.ஜ., - சரஸ்வதி: ஈரோட்டில் இருந்து மோளபாளையம் செல்லும் சாலை குறுகலாக உள்ளது. இந்த சாலையை விரிவாக்கம் செய்து, ரவுண்டானா அமைத்து தர வேண்டும்.
சாவடிபாளையம் - பஞ்சலிங்கம் செல்லும் சாலையில், இரண்டு இடங்களில் ரயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும். ஈரோடு - கொடுமுடி சாலையில் ரயில்வே கேட் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும்.
அமைச்சர் வேலு: ஈரோடு முதல் கரூர் வரையிலான, 61 கி.மீ., சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது.
முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 18 கி.மீ., சாலை நான்கு வழியாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், 8 கி.மீ., சாலையை நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. கால மாற்றத்திற்கு ஏற்பவும், அரசின் நிதி நிலைமைக்கு ஏற்பவும், இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படும்.
இந்திய கம்யூ., - ராமச்சந்திரன்: தளி தொகுதியில், ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை வழியாக ஒகேனக்கல் செல்லும் சாலை கர்நாடகா, ஆந்திரா எல்லைகளை இணைக்கிறது. அதில், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது.
இரண்டு வழிச்சாலையாக உள்ள அந்த சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும்.
அமைச்சர் வேலு: ஓசூர், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. அங்குள்ள சாலைகள் படிப்படியாக நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ள சாலையும், அரசின் நிதி நிலைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்யப்படும்.
அ.தி.மு.க., - ஜெயகுமார்: பெருந்துறை தொகுதியில், ஊத்துக்குளியில் இருந்து செல்லும் ரயில் பாதையின் இரண்டு புறங்களிலும், கிராமங்களுக்கு செல்ல நுழைவு பாலங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
அதை முள்வேலி அமைத்து மூடி, அதிவிரைவு ரயில்வே பணிகள் நடக்கின்றன. அவ்வழியாக மக்கள் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் வேலு: இதுதொடர்பாக, எம்.எல்.ஏ., விளக்கமாக கடிதம் கொடுத்தால், அதிகாரிகளை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

