ADDED : ஆக 19, 2025 10:17 PM
சென்னை:தமிழகத்தில், 15 இடங்களில், 'ரோப் கார்' வசதி ஏற்படுத்துவதற்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மலைவாசஸ்தலங்கள், மலைக் கோவில்கள் உள்ளிட்ட சுற்றுலாதலங்களில், ரோப் கார் சேவையை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. தற்போது, உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்கு செல்வதற்கு, ரோப் கார் அமைப்பதற்கு ஒப்பந்ததாரர் தேர்வு துவங்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலை, திருப்பத்துார் மாவட்டம் ஏலகிரி, தேனி மாவட்டம் குரங்கனி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளிட்ட, 22 இடங்களில் ரோப் கார் சேவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அதில், 15 இடங்களில், ரோப் கார் வசதி ஏற்படுத்த முடியும் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, இப்பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, மத்திய அரசு முன்வந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, ஒப்பந்த அடிப்படையில், இதற்கான நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளது.